தகழி சிவசங்கரப் பிள்ளை மலையாளத்தில் எழுதி 1947 வெளிவந்த “தோட்டியின் மகன்” என்னும் நாவலின் தமிழாக்கத்தை சுந்தர ராமசாமி “தோட்டியின் மகன்” என்கிற தலைப்பிலேயே வெளியிட்டுள்ளார்.
இந்த நாவலை சமீபத்தில் படித்தேன். ஒரு தோட்டியின் வாழ்க்கையை, அவர்கள் சந்திக்கும் துன்பங்கள், புறக்கணிப்புகள், அவமானங்கள் அனைத்தையும் நம் கண் முன்னர் கொண்டுவந்து நிறுத்துகிறார் தகழி சிவசங்கரப் பிள்ளை.
இதன் தமிழாக்கம் அவ்வளவு அருமையாக இருக்கிறது. நாவலின் முதல் பக்கத்தை படிக்க ஆரம்பிக்கும்போது ஆசிரியர் நம் கையைப் பிடித்துக்கொண்டு ஒரு தோட்டியின் வாழ்க்கைக்குள் கூட்டிச் செல்கிறார். அனைவரும் அறிந்திருந்தவாறு ஒரு தோட்டியின் வாழ்வில் துர்நாற்றம் மட்டுமே இல்லை.
அங்கேயும் கனவுகள் உண்டு, ஆசைகள் உண்டு. அவனுக்கும் சக மனிதனைப்போல் வாழ உரிமை உண்டு அதற்கு தகுதியும் உண்டு என்பதை சொல்லியிருக்கிறார்.
ஒரு தோட்டி என்பவன் தோட்டியால் சிருஷ்டிக்கப்படுவதில்லை. காலமும் சமூகமுமே ஒருவனை தோட்டியாக்குகிறது என்பதை விளக்கியிருப்பார். சுடலைமுத்து தன் மகன் தோட்டியாக மாறக்கூடாது என்று அவன் காணும் கனவில் நியாயம் தெரிகிறது. அவன் தன்மானத்தின் வெளிப்பாடாக சித்தரிக்கப்படுகிறான்.
ஆனால் சில நேரங்களில் அவன் கனவு வெறியாக மாறுவதையும் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். தோட்டியின் மகனுக்கு மோகன் என்ற பெயர் கொஞ்சமும் ஒட்டவில்லை என்பதை அந்த ஆலப்புழா நகரத்துவாசிகளின் எள்ளல்களாலும் சிரிப்புகளாலும் சொல்வதில் இருந்து, மனித மனதின் ஆழத்தில் குடிக்கொண்டிருக்கும் குரூரத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறார்.
தோட்டியின் மகனாய் மாறிய மோகன் ஒரு புரட்சியாளனாய் மாறி ஒரு தலைவனாய் செந்நிற மாலையை சுமந்து நிற்கின்றான்.
தலித் இலக்கியத்தில் இந்த நாவல் ஒரு மிகப்பெரிய சாதனையை புரிந்துள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் அப்படியே காட்டுகிறது. இந்த நாவல் எழுதப்பட்டது 1947 என்றாலும், இன்றும் பல மக்களின் நிலை இதில் வரும் மக்களின் நிலையை ஒத்துள்ளது என்பதை உணரும்பொழுது, நாம் ஒரு சமூகமாக தோற்றுவிட்டோம் என்பதையே காட்டுகிறது.
நேரம் கிடைத்தால் இந்த நாவலை தவறாமல் படித்துப் பார்க்கவும்.
நன்றி..
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment