உறவுகள் சிறுகதை

Thursday, September 27, 2018


     
        உறவுகள் தொடர்கதை.....

இந்த வாசகத்தை எல்லோரும் கேட்டிருப்போம். ஆனால் நான் இங்கே ஒரு புது வாசகத்தை சொல்லப் போகிறேன்.

       உறவுகள் சிறுகதை.....

ஆம் உறவுகள் இன்றைய காலகட்டத்தில் வெறும் சிறுகதையாக இருக்கின்றன. ஒரு பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நம் சமூகம் கூட்டுக் குடும்பத்தை பின்பற்றி வந்தது. காலப்போக்கில் உலகமயமாதலின் பல்வேறு விளைவுகளில் கூட்டுக் குடும்பங்கள் இன்று தனி குடும்பங்களாக மாறிவிட்டது. இதனால் இந்த இருபது ஆண்டுகளாக குடும்ப சூழலில் வாழ்ந்து வந்த குழந்தைகளுக்கு உறவுகளின் மகத்துவம் தெரியாமலே போய்விட்டது என்றும் கூட சொல்லலாம். அன்றைக்கு தனிக் குடும்பங்களில் வளர்ந்து, வாழ்ந்து வந்த குழந்தைகள் இன்று பெரியவர்களாக தங்களுக்கென ஒரு குடும்பத்தை தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு உறவுகளின் தேவையும் உறவுகளின் அவசியமும் புரியாது. இவர்கள் தங்களின் குழந்தைகளுக்கு தாங்கள் எப்படி வளர்ந்தார்களோ, அந்த ஒரு சூழ்நிலையையே கொடுப்பார்கள்.

 நான் என்னுடைய சிறுவயதில், ஆண்டு தேர்வு விடுமுறை நாட்களில் பெரியம்மா வீட்டிற்கு, தாத்தா வீட்டிற்கு, மாமா வீட்டிற்கு இப்படி சொந்த பந்தங்களின் வீட்டிற்கெல்லாம் சென்று வருவேன். நான் அந்த ஓராண்டில் பள்ளிக்கூடத்தில் கற்றுக் கொண்டதை விட, இந்த ஒரு மாதத்தில் என் சொந்த பந்தங்களின் வீட்டில் இருந்து வளர்ந்து கற்றுக்கொண்டது அதிகம் என்று கூட சொல்லலாம். பள்ளியில் எனக்கு, என் வாழ்க்கைக்கு தேவையான எந்த ஒரு விஷயத்தையும் பெரிதாக சொல்லிக் கொடுக்கவில்லை. வகுப்பில் நான் முதல் முதலில் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டது- "பேசாதே" என்பதைத்தான் .

  வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது அருகில் இருக்கும் நண்பனுடன் பேசினாலே ஆசிரியர் என்னை திட்டுவார். பேசாதே பேசினால் வகுப்பை விட்டு வெளியே அனுப்பி விடுவேன் என்று மிரட்டுவார். இதனால் என் சிறு வயதிலேயே என் மனதில் பதிந்து விட்டது. மற்றவருடன் பேசுவது தவறு அப்படி  பேசினால் நாம் தண்டிக்கப்பட்டு விடுவோம் இது நமக்கு அசிங்கத்தை கொடுக்கும் அதனால் நாம் எவருடனும் பேச வேண்டாம் என்கிற ஒரு முடிவு என் மனதில் பதிந்து விடுகிறது. இதுவே நான் ஊருக்கு விடுமுறை நாட்களில் செல்லும் பொழுது அங்கே கிராமத்தில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் நட்புடன் பழகுவார்கள். தெருவில் நடந்து செல்பவர் கூட யார் என்று எனக்குத் தெரியாது இருந்தாலும் அவர்கள் வீட்டிற்கு வந்து என்னிடம், 'தம்பி எப்ப வந்த எப்படி இருக்க நல்லா இருக்கியா ஊர்ல அம்மா அப்பா தங்கச்சி எல்லாம் நல்லா இருக்காங்களா ஏன் அவங்க வரலையா?' இந்த மாதிரி நலம் விசாரிச்சுட்டு போவாங்க. இது மாதிரி விஷயங்கள் முகம் தெரியாத, முன்பின் தெரியாத ஒருவருடன் பேசுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

  நம் மனித சமூகமே ஒருவருடன் இன்னொருவர் தொடர்பில் இருப்பதில் தான் வளர்கிறது. ஆனால் நான் இன்னொருவருடன் தொடர்பில் இருப்பதை என் பள்ளிக்கூடம் சொல்லித் தரவில்லை. மாறாக நான் அவருடன் பேச கூடாது என்பது மட்டுமே எனக்கு வற்புறுத்தியது. அதுமட்டுமில்லாமல் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் பள்ளிக்கூடத்தை விட இந்த உறவுகளிடம் இருந்தும் வெளியில் இருந்துதான் கற்றுக் கொள்கிறேன் என்பதை 28 ஆண்டுகள் கழித்து இன்று நான் உணர்கிறேன். பள்ளிக்கூடத்தில் விளையாடுவதற்கு என்று வாரத்திற்கு இரண்டு வகுப்புகள் இருக்கும் வாரத்திற்கு அந்த இரண்டு வகுப்பிற்காக அனைவரும் காத்து கிடப்போம். மற்ற நேரங்களில் விளையாடுவதை பெற்றோர்களும் பொதுவாக விரும்புவதில்லை. விளையாடினால் படிப்பதற்கான நேரம் குறைந்துவிடும். படிக்கும் நேரம் குறைவு என்பதற்காகவே வெளியே விளையாட விடமாட்டார்கள். ஆனால் கிராமத்திற்கு சென்ற போது அங்கே அதிகம் விளையாடுவதற்கு நேரம் இருக்கும், புது புது நபர்களுடன் பழகுவதற்கு நேரம் இருக்கும், நல்லது கெட்டது என்ன என்பதை தெரிந்து கொள்ள நேரம் இருக்கும், இவை அனைத்திற்கும் வாய்ப்பு இருக்கும் .


  உறவுகள் நம் வளர்ச்சியை நிச்சயம் விரும்புவார்கள். நமக்கு நல்ல விஷயங்களையும் எவையெல்லாம் தேவையில்லை என்பதையும் சொல்லிக் கொடுப்பார்கள். சில விஷயங்களை பெற்றோர்களும் சொல்லிக்கொடுக்க மறந்துவிடும், மறுத்துவிடும் விஷயங்களை நமக்கு உறவுகள் சொல்லிக் கொடுப்பார்கள். அவர்களுக்கு அந்த உரிமை இருக்கிறது. நம்மை நல்வழிப்படுத்தும் பொறுப்பும் நம் உறவுகளுக்கு அப்போது கொடுத்திருந்தோம்.  கூட்டுக்குடும்பம் என்பதையும் தாண்டி தனி குடும்பங்களாக இருக்கும் பொழுதும் கூட உறவுகளுடன் ஒரு தொடர்பில் இருந்து வந்த காலம் அது. ஆனால் இன்று இருக்கும் பெரியவர்கள் அதாவது இருபது முப்பது வயதைக் கடந்த பெரியவர்களாகிய அந்த காலத்து குழந்தைகளுக்கு தங்கள் உறவுகளின் பெயர் கூட தெரியாது. அப்படி வளர்ந்து விட்டார்கள். உறவுகளின் அவசியம் அவர்களுக்கு எப்போது புரியும் என்று எனக்கு தெரியவில்லை. நம் சமூக கட்டமைப்பு மாறிவிட்டது. நாமும் அந்த மாற்றத்திற்கு ஒரு காரணம்தான் மாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல மாற்றத்தை ஆதரித்தவர்களும் நாம் தான். யாரோ ஒரு சமூகம் என்று ஒரு சமூகத்தின் மீது பழியை போட்டுவிட்டு நாம் தப்பித்துக் கொள்வது நியாயமல்ல . அனைத்து பிழைகளுக்கும் நாமும் ஒரு காரணம் என்பதை உணர வேண்டும் . ஒரு செய்தியை படித்தேன். சீனாவில் இப்போது இருக்கும் 40 அல்லது 50 வயதை கடந்தவர்களுக்கு உறவுகள் என்று எவருமில்லை. தாய் மாமன், அத்தை, பெரியப்பா இந்த மாதிரி சொல்லிக்கொள்ள ஒரு உறவுகளும் இல்லை என்பதை படித்தேன். ஏனென்றால், சீனாவில் பல ஆண்டுகளாக இருந்து வந்த ஒரு குழந்தை என்கிற திட்டத்தால், சட்டத்தால் ஒரு பெற்றோர் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள, அதனால் அவர்களுக்கு அண்ணன் தம்பி அக்கா தங்கை அதுமட்டுமல்லாமல் மாமன் அத்தை பெரியம்மா பெரியப்பா சித்தப்பா சித்தி இதுபோன்ற எந்த ஒரு உறவுகளைப் பற்றியும் அவர்களுக்கு தெரியவில்லை. அவர்களின் பாசத்தை அவர்கள் உணரவில்லை. இது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா. நாம், நம் குடும்பம் என்பது, தாய் தந்தை மற்றும் நம்முடன் பிறந்த நம் ரத்த சொந்தம் இவை மட்டும்தான் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், இது ஒரு குடும்பம் ஆகிவிடாது. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள். ஒரு நான்கு பேர் ஐந்து பேர் சேர்ந்து ஒரு குடும்பம் ஆகிவிடாது. ஒட்டுமொத்த சொந்தங்களும் சேர்ந்ததுதான் ஒரு குடும்பம். அந்த ஒரு குடும்பமே பல்கலைக்கழகம் என அழைக்கப்படும். ஒரு பல்கலைக் கழகத்தில் பல்வேறு பிரிவுகள் இருக்கும் ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும் அதேபோன்று நம் குடும்பத்தின் பல்வேறு உறவுகளில் ஒவ்வொரு உறவிற்கும் நிறைகள் குறைகள் அனைத்தும் இருக்கும்.


  குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்கிற ஒரு பழமொழியே நம்மிடம் உண்டு எத்தனை பேருக்கு தெரியும். ஒருவர் தவறு செய்துவிட்டால் அவர் உடனே நமக்கு வேண்டாம் என்றும் ஒதுக்கிவிடும் பழக்கம் தான் இருக்கிறது. உறவின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளத்தான் அந்த ஒரு பழமொழி நம்மிடையே சொல்லப்பட்டது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அனைத்து மனிதர்களுக்கும் நிறை குறை என்று இரண்டுமே இருக்கும். குறைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் எதையுமே சாதிக்க முடியாது. அதிலுள்ள நிறைகளையும் பார்க்க வேண்டும். அது போலத்தான் உறவுகள் செய்யும் தவறுகளை மட்டுமே நாம் பெரிதாக எண்ணினால் அவர்களின் நல்ல விஷயம் நம் கண்களுக்குத் தெரியாமல் போய்விடும்.


  உறவுகள் தொடர்கதையாக இருந்த காலம் போய் இன்று வெறும் சிறுகதையாக மாறிவிட்டது. இன்னும் சில காலத்திற்குள் இந்த உறவுகள் ஹைக்கூ கவிதையாக மாறும். இன்னும் உறவுகளின் அவசியம் சுருங்கிப்போகும், ஏன் உறவுகளே இல்லாமல் கூட போய்விடும் நிலை ஏற்படலாம். அதை தடுப்பது நம் கையில்தான் உள்ளது. உறவுகளுக்கு முக்கியத்துவத்தை கொடுப்போம் உறவுகளின் முக்கியத்துவத்தை நம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்போம் இந்த சமூகத்திற்கும் சொல்லிக் கொடுப்போம்.

* தினேஷ்மாயா *

0 Comments: