உலகப் பொருளாதார சீர்திருத்தம்

Tuesday, September 18, 2018


         அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு மட்டுமல்ல, பல வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் நாணயங்களும் தொடர்ச்சியாக டாலருக்கு நிகரான மதிப்பில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதற்கு காரணம் பல இருந்தாலும் அதற்கு முழுமுதற் காரணம் என்னவென்றால் உலக வர்த்தகம் அனைத்தும் பெரும்பான்மையாக அமெரிக்க டாலர்களிலேயே நடத்தப்படுகிறது. இந்த நிலையில்தான் அமெரிக்க டாலருக்கு அதிகமான தேவை ஏற்படுகிறது.

      எந்த ஒரு விஷயத்திற்கு தேவை அதிகமாக இருக்கிறதோ அதன் மதிப்பு அதிகமாக தான் இருக்கும். அதுபோலத்தான் அமெரிக்க டாலரின் மதிப்பு பல நாட்டு நாணயங்களை விடவும் சர்வதேச பொருளாதாரத்தில் அதிகமாக இருக்கிறது. இதற்கு ஒரு தீர்வு இருக்கிறது. அது என்னவென்றால், ஒவ்வொரு நாடும் தங்களின் வர்த்தகத்தை தங்கள் நாட்டின் நாணயத்தில் மேற்கொண்டால் அமெரிக்க டாலரை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

    உதாரணமாக, நாம் சீனாவில் இருந்து ஒரு பொருளை இறக்குமதி செய்கிறோம் என்றால் அதற்கு அமெரிக்க டாலரில் நாம் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. மாறாக, அதற்கு நம் இந்திய ரூபாய் மூலமாகவே பணம் செலுத்தலாம். இந்த நிலை வரும்போது அமெரிக்க டாலரை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஒவ்வொரு நாடும் தங்களின் அமெரிக்க டாலர் எவ்வளவு கையிருப்பு இருக்கிறது என்பதை மிக தீவிரமாக கவனித்து வருகின்றனர். ஏன் இந்தியாவில் கூட அந்நிய செலாவணி கையிருப்பு எவ்வளவு என்பதை தினமும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்நிய செலாவணி என்று சொல்லும் பொழுது இந்தியா அல்லது எந்த ஒரு நாடும் ஒரு ஆறு அல்லது ஏழு முக்கிய நாட்டின் நாணயங்களை தங்கள் கைவசம் வைத்துள்ளது. உலக வர்த்தகத்தில் பெரும்பான்மையாக ஏற்றுக்கொள்ளப்படும் சில நாடுகளின் நாணயங்களில் தான் வர்த்தகம் செய்கிறார்கள். அந்த நிலையை நாம் மாற்ற வேண்டும் .

    ஏனென்றால், இந்த நிலை அந்த குறிப்பிட்ட சில நாணயங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நாடுகளுக்கே உயர்வை தருகிறது வளர்ச்சியை தருகிறது ஏற்றத்தை தருகிறது. அந்த நாணயங்vகளை வர்த்தகம் பிற நாடுகளுக்கு பொருளாதார வீழ்ச்சியை மட்டுமே தருகிறது. உலக நாடுகள் அனைத்தும் ஒரு கூட்டமைப்பாக ஒன்றிணைந்து இதற்கு ஒரு தீர்வை காண வேண்டும். நாம் தென்னாப்பிரிக்காவில் இருந்து ஒரு பொருளை வாங்குகிறோம் என்றால் அதற்கு நாம் ஏன் அமெரிக்க டாலரில் பணம் செலுத்த வேண்டும்? மாறாக தென்னாப்பிரிக்காவில் என்ன நாணயம் பயன்படுத்துகிறார்களோ அந்த நாணயத்தை நம்மிடம் கையிருப்பாக வைத்திருந்து அதில் நாம் செலுத்தலாமே!? இப்படி செலுத்துவதால் நாம் அமெரிக்க டாலரை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதுபோல இந்தியாவின் ரூபாயை தென்னாபிரிக்காவும் அந்நிய செலாவணியாக வைத்திருந்து இந்தியாவில் எந்த ஒரு வர்த்தகத்தை மேற்கொண்டாலும் அதற்கு இந்திய ரூபாயில் பணம் செலுத்தலாம். இது போன்ற நாடுகள் அல்லது பல கூட்டமைப்பான நாடுகள் தங்களுக்கிடையே வர்த்தகம் செய்யும் பொழுது தங்கள் பரஸ்பர நாணயங்களை தங்களின் வர்த்தகத்திற்கு பயன்படுத்தினால் அமெரிக்க டாலரை நம்பியிருக்க வேண்டிய அவசியம் இருக்காது . அதுமட்டுமின்றி அமெரிக்க டாலருக்கு நிகரான தங்கள் நாணயத்தின் மதிப்பு வீழ்ந்தாலும் வளர்ச்சி அடைந்தாலும் அதனால் தங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கும் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது என்பது என் கருத்து.

* தினேஷ்மாயா *

0 Comments: