இப்போதெல்லாம் திரையரங்கிற்கு தாமதமாக சென்றாலும் கவலையில்லை. விளம்பரங்களை போட்டு நமக்காக படத்தை கொஞ்ச நேரம் தள்ளிப்போடுவார்கள். அப்படி என்னதான் விளம்பரம் செய்கிறார்கள் என்று பார்த்தால், அதில் முக்கியமாக சொல்லவேண்டியது, புகை மற்றும் மது தொடர்பான விளம்பரம்.
அரசாங்கத்தால் பொது நலன் கருதி வெளியிடப்படும் விளம்பரம் அது. அப்படிதான் அதில் சொல்கிறார்கள்.
பொது இடத்தில் புகைப்பிடிப்பது தவறு, அது அபராததிற்குரிய ஒரு குற்றம் என்பது அனைவருக்கும் தெரியும். தெரிந்தும் பொதுமக்களின் நலனுக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில்கூட புகைப்பிடிக்கிறார்கள். அதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை அதிக அபராதம் வசூலிப்பது மட்டுமே.
என் கேள்வி இதுதான். பொது இடத்தில் புகைப்பிடித்தால் அபராதம் விதிக்கப்படும் என்னும் சட்டம் வந்து ஆண்டுகள் ஓடிவிட்டது. அப்படியிருக்க, இதுவரை எத்தனை லட்சம் வழக்குகள் அப்படி பதிவாகியிருக்கின்றன, எத்தனை கோடி ரூபாய் பணம் அபராதமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது ?
சட்டம் கொண்டு வந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று அர்த்தமா சொல்லுங்கள். மக்களின் நலனுக்காக புகையிலை பொருட்களை விற்பனையையும் உற்பத்தியையும் முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். அதில் கிடைக்கும் சொற்ப வருமானம் நம் நாட்டு மக்களின் உடல் நலத்திற்காக செலவு செய்யப்படும் பணத்தைவிட குறைவு என்பதை அரசாங்கம் புரிந்துக்கொண்டால் சரி.
புகையிலை விற்பனை மூலம் உதாரணமாக 20000 கோடி ரூபாய் கிடைத்தால், புற்றுநோயாளிகளுக்காக அரசாங்கம் செய்யும் செலவு 1.5 லட்சம் கோடி ரூபாய் என்கிற அளவில் இருக்கிறது.
நீ வாழ பிறரை கெடுக்காதே என்கிறது வேதங்கள். உண்மையில் பொதுநலன் கருதி அரசாங்கம் ஏதும் செய்ய நினைத்தால், வெறும் விளம்பரங்களை ஒளிப்பரப்புவதை விடுத்து, அந்த பொருட்களை தடை செய்து நம் இளைய தலைமுறையினரை அந்த போதையில் இருந்து வெளியே கொண்டு வரலாம்.
- பொதுநலன் கருதி வெளியிடும் -
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment