உணவின் இரகசியம்

Saturday, May 30, 2020



நாம் எதற்காக உண்கிறோம்? பசி எதற்காக எடுக்கிறது? – இதுபோன்ற கேள்விகளுக்கு நமக்கு விடை தெரியும்.

உடலின் இயக்கத்துக்கு சக்தி தேவைப்படுகிறது, அதனால் பசி எடுக்கிறது, அதற்காக உண்கிறோம். சரிதானே !

சரி. எனக்கொரு கேள்வி. பல நேரங்களில், நாம் உணவு உட்கொண்ட பிறகு நமக்கு சோர்வு ஏற்படுகிறதல்லவா? அது ஏன் ?

நமக்கு இதற்கும் விடை தெரியும். அறிவியல் இதையும் நமக்கு கற்பித்திருக்கிறது. அதாவது, நமது உடல் நாம் உட்கொண்ட உணவை செரிமானம் செய்ய அதிக சக்தியை செலவிடுகிறது, அதனால் நமது உடல் சோர்வு கொள்கிறது என்பதுதானே அந்த விடை.

ஆம். இது சரிதான்.

இவையெல்லாம் இருக்கட்டும். நாம், நம்முடைய உணவு பழக்கத்தை எங்கிருந்து கற்றுக்கொள்கிறோம். பெரும்பாலும் நாம் வளரும்போது நம் வீட்டில் என்ன பின்பற்றுகிறார்களோ அதையேதான் நம் உணவுமுறையாக கொண்டிருப்போம். நாம் வளர்ந்தபிறகு, உணவு பழக்கத்தை சிறிது மாற்றிக்கொள்வோம். இது சரி, இது தவறு என்று எவ்வளவோ பேர் சொன்னாலும் எதையும் கேட்காமல், நம் வயிறு என்ன சொல்கிறதோ, நம் நாவிற்கு எந்த சுவை அதிகம் பிடிக்கிறதோ அதையேதான் நாம் அதிகம் விரும்பி சுவைப்போம்.

உணவில் கட்டுப்பாட்டுடன் யார் இருக்கிறாரோ, அவரின் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அவர் நீண்டநாள் உயிர் வாழ்வார். உணவே மருந்தாய் இருக்கும் நம் உணவு பழக்கத்தினை அறவே மறந்துவிட்டு, நம் உடலுக்கு ஒவ்வாத உணவை நாம் வலுகட்டாயமாக திணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.
உணவைப் பற்றி எனக்கு தெரிந்த, நான் பின்பற்றிவரும், இனி பின்பற்ற விரும்பும் சில வழிமுறைகளை இங்கே பதிவிட விரும்புகிறேன். ஏனென்றால், அறிவியல் சொல்கிறது – ஆற்றலை ஆக்கவோ முடியாது அழிக்கவோ முடியாது. ஆனால், ஒருவகை ஆற்றலை மற்றோருவகை ஆற்றலாக மாற்ற முடியும். அதாவது, நம் உயிருக்கு தேவையான ஆற்றல், நம் உணவில் இருந்துதான் கிடைக்கிறது. உணவின்றி, நீரின்றி, காற்றின்றி எவராலும் உயிர்வாழ முடியாதல்லவா.

1.      பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.
2.   அடுத்தவேளை பசி எடுக்கம்படி இந்த வேளை உணவை அளவாக சாப்பிடவேண்டும். எடுத்துக்காட்டாக, மதிய உணவிற்கு பிரியாணி கிடைக்கிறது என்பதால் நம் வழக்கமான அளவைவிட அதிகமாக உண்ணக்கூடாது, அது பெரும் பிரச்சனையையே தரும்.
3.   வாரத்திற்கு ஒருமுறையாவது வெறும் நீரை மட்டுமே உட்கொண்டு, விரதம் இருத்தல் சிறந்தது. இது நம் உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவும்.
4.   எப்போதுமே பாதி வயிற்றுக்கு மட்டுமே சாப்பிட வேண்டும்.
5.   நமக்கு பிடித்த உணவை சாப்பிடும்போது, அந்த ஒரு நொடியில் நம் மனம் சொல்லும், இன்னும் கொஞ்சம் சாப்பிடுவோமே, நம் பிடித்த உணவுதானே, ஒருநாள் அதிகம் சாப்பிட்டால் ஒன்றும் ஆகாதென்று. அந்த நொடியில், நம் உணவை முடித்துக்கொண்டு எழுந்துவிட வேண்டும்.
6.   கடைகளில் விற்கப்படும் நொறுக்குத்தீனிகள், பாக்கெட்களில் அடைப்பட்ட உணவுகள், உணவகங்களில் உண்பது, நேரம் தவறி உண்பது, உண்ணும்போதும் உண்டபின்பும் உடனே அதிக தண்ணீர் பருகுவது, சாப்பிடும்போது பேசுவது, அல்லது தொலைக்காட்சி பார்ப்பது, மொபைல் பார்ப்பது, அரட்டை அடிப்பது, அல்லது வேறு சிந்தனையில் இருப்பது, இவற்றை தவிர்க்க வேண்டும்.
7.   உணவை உண்கையில் நம் கவனம் அனைத்தும் உணவில் மட்டுமே இருக்க வேண்டும். அதை நன்றாக மென்று, எச்சிலோடு சேர்த்து கூழாக்கி விழுங்க வேண்டும். நம் வயிற்றின் மீதான சுமையை நாம் இப்படி செய்வதனால் குறைக்கிறோம்.
8.   பழங்களும் காய்கறிகளும் அதிகம் உண்ணலாம்.
9.   அசைவ உணவுகளில் இருக்கும் சத்து நம் உடலுக்கு தேவைதான், அதுவும் அளவாக எடுத்துக்கொண்டால் நன்று. அளவு மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
10. உணவு தான் நமக்கு உயிர் கொடுக்கிறது. உணவுதான் மனிதனை நோயாளி ஆக்குகிறது. அதே உணவுதான் மனிதனை குணப்படுத்தவும் செய்கிறது. உணவை பொறுப்பாக கையாண்டால், உணவும் நம்மை பொறுப்பாக கையாளும்.


* தினேஷ்மாயா *

0 Comments: