சூது கவ்வும் !!

Saturday, May 30, 2020





சமீபகாலமாக  இணையத்தில் ரம்மி எனப்படும் விளையாட்டு மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகி அது அவர்களை பெரிதும் ஆட்கொண்டிருப்பதை காணமுடிகிறது. சூதாட்டம் என்பதை இணையத்தில் விளையாடினாலும் சரி, எங்கு விளையாடினாலும் சரி அது நிச்சயம் ஒருவனின் வீழ்ச்சிக்கு காரணமாகிவிடும் என்பதை எவரும் உணர்ந்தபாடில்லை.
சூது கவ்வும் என்பது இன்றளவும் பொருத்தமாக இருக்கும் ஒரு முதுசொல். பாரத கதை அனைவரும் அறிந்ததே. பாண்டவர்கள் நாடிழந்து, கானகத்தில் திரிய இந்த சூதாட்டம்தான் காரணம். நளன் தன் மனைவியை பிரிய, நாட்டை இழக்க இந்த சூதாட்டமே காரணம். இவையெல்லாம் வெறும் கதைகள் என்று நீங்கள் புறந்தள்ளினாலும், அதில் கூறப்பட்டுள்ள அறம் என்பதை எவரும் மறுக்க முடியாது.

ரம்மி என்று மட்டுமில்லை, இன்றைய உலகில் பல்வேறு வகையான சூதாட்டங்கள் இருக்கிறது. எவற்றிலும் சிக்காமல் இருப்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள். ஏதாவது ஒரு சூதாட்டத்தில் சிக்கிக்கொள்பவர்கள் சுழலில் மாட்டிக்கொண்டு வெளியே வரமுடியாதவர்கள் போல் தவிக்கிறார்கள்.
இந்த சூதாட்டங்கள் எல்லாம் கொடுப்பதைப்போன்று கொடுக்கும். ஆனால், அது எடுப்பதோ கொடுத்ததைவிடவும் பன்மடங்கில் இருக்கும். இந்த உளவியல் தெரியாமல் அல்லது தெரிந்தும் அதிலிருந்து வெளியேவர விரும்பாமல் இருப்பவர்கள்தான் அதிகம்.
ஒரு திரைப்படத்தில் சொல்வதுபோல், ஒருவனை ஏமாற்ற வேண்டுமானால் அவன் ஆசையை தூண்டவேண்டும். அதைத்தான் செய்கிறார்கள். Casino, Rummy இதுபொன்ற விளையாட்டுக்களை பொழுதுபொக்கிற்காக விளையாடுபவர்களைவிட பணத்திற்காக விளையாடுபவர்களே அதிகம். இதில் அதிர்ஷ்டம் என்பது 10% மட்டுமே. மீதம் 90% உங்கள் திறமை என்று நம்பினால் அது மிகப்பெரிய தவறு. உங்கள் திறமைக்கான மதிப்பு வெறும் 10% மட்டுமே. மீதம் 80% அந்த விளையாட்டை நடத்துபவர்கள் கையில் இருக்கிறது. ஒருவனுக்கு எப்போது கொடுக்கனும், எப்போது எடுக்கனும், எவ்வளவு கொடுக்கனும், எவ்வளவு எடுக்கனும் என்றெல்லாம் அவனே தீர்மானிக்கிறான். அத்திப் பூத்தார்போல ஒருசிலர் மட்டுமே அதிக லாபமடைகிறார்கள். ஆனால், அடுத்தமுறை அவர்களுக்கு அதேபோல் அதிர்ஷ்டம் கிடைக்காது. மனிதனின் உளவியலை நன்கு அறிந்த அவர்கள்தான் நம் உழைப்பை சுரண்டுகிறார்கள். அந்த உளவியலை நன்கு உணர்ந்துக்கொண்டு அதில் இருந்து விலகி இருப்பதே சிறப்பு.
சூதாட்டத்தால் வாழ்க்கையை இழந்தவர்கள் காலம் காலமாக இருந்துக்கொண்டே இருக்கிறார்கள். அதனால் கோடிகளை வென்றவன் எவனும் இல்லை.

எப்போதும் மறவாதீர்கள் - அன்றும் இன்றும் என்றும் – சூது கவ்வும் !!

* தினேஷ்மாயா *

நேரம்



    அனைவருக்கும் பொதுவாக இருப்பது நேரம். ஆனால், அனைவரும் அதை ஒரேமாதிரி செலவழிப்பதில்லை. நாம் நம்முடைய நேரத்தை எப்படி செலவு செய்கிறோம் என்பதே நம் நிகழ்காலத்தையும், நம் எதிர்காலத்தையும், நம் வாழ்வின் வளர்ச்சியையும் தீர்மானிக்கிறது.

நேரத்தை சேமிக்கவும் முடியாது, ஆனால், வீணடிக்க முடியும். 

எவன் ஒருவன் தன் நேரத்தை பயனுள்ளதாக மாற்றுகிறானோ அவனுக்கே இந்த உலகம் தலைவணங்கும், அவனே இங்கே தலைவனாக அறியப்படுகிறான். ஆழ்ந்து சிந்தித்தால் இந்த உண்மை புலப்படும்.

* தினேஷ்மாயா *

உணவின் இரகசியம்



நாம் எதற்காக உண்கிறோம்? பசி எதற்காக எடுக்கிறது? – இதுபோன்ற கேள்விகளுக்கு நமக்கு விடை தெரியும்.

உடலின் இயக்கத்துக்கு சக்தி தேவைப்படுகிறது, அதனால் பசி எடுக்கிறது, அதற்காக உண்கிறோம். சரிதானே !

சரி. எனக்கொரு கேள்வி. பல நேரங்களில், நாம் உணவு உட்கொண்ட பிறகு நமக்கு சோர்வு ஏற்படுகிறதல்லவா? அது ஏன் ?

நமக்கு இதற்கும் விடை தெரியும். அறிவியல் இதையும் நமக்கு கற்பித்திருக்கிறது. அதாவது, நமது உடல் நாம் உட்கொண்ட உணவை செரிமானம் செய்ய அதிக சக்தியை செலவிடுகிறது, அதனால் நமது உடல் சோர்வு கொள்கிறது என்பதுதானே அந்த விடை.

ஆம். இது சரிதான்.

இவையெல்லாம் இருக்கட்டும். நாம், நம்முடைய உணவு பழக்கத்தை எங்கிருந்து கற்றுக்கொள்கிறோம். பெரும்பாலும் நாம் வளரும்போது நம் வீட்டில் என்ன பின்பற்றுகிறார்களோ அதையேதான் நம் உணவுமுறையாக கொண்டிருப்போம். நாம் வளர்ந்தபிறகு, உணவு பழக்கத்தை சிறிது மாற்றிக்கொள்வோம். இது சரி, இது தவறு என்று எவ்வளவோ பேர் சொன்னாலும் எதையும் கேட்காமல், நம் வயிறு என்ன சொல்கிறதோ, நம் நாவிற்கு எந்த சுவை அதிகம் பிடிக்கிறதோ அதையேதான் நாம் அதிகம் விரும்பி சுவைப்போம்.

உணவில் கட்டுப்பாட்டுடன் யார் இருக்கிறாரோ, அவரின் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அவர் நீண்டநாள் உயிர் வாழ்வார். உணவே மருந்தாய் இருக்கும் நம் உணவு பழக்கத்தினை அறவே மறந்துவிட்டு, நம் உடலுக்கு ஒவ்வாத உணவை நாம் வலுகட்டாயமாக திணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.
உணவைப் பற்றி எனக்கு தெரிந்த, நான் பின்பற்றிவரும், இனி பின்பற்ற விரும்பும் சில வழிமுறைகளை இங்கே பதிவிட விரும்புகிறேன். ஏனென்றால், அறிவியல் சொல்கிறது – ஆற்றலை ஆக்கவோ முடியாது அழிக்கவோ முடியாது. ஆனால், ஒருவகை ஆற்றலை மற்றோருவகை ஆற்றலாக மாற்ற முடியும். அதாவது, நம் உயிருக்கு தேவையான ஆற்றல், நம் உணவில் இருந்துதான் கிடைக்கிறது. உணவின்றி, நீரின்றி, காற்றின்றி எவராலும் உயிர்வாழ முடியாதல்லவா.

1.      பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.
2.   அடுத்தவேளை பசி எடுக்கம்படி இந்த வேளை உணவை அளவாக சாப்பிடவேண்டும். எடுத்துக்காட்டாக, மதிய உணவிற்கு பிரியாணி கிடைக்கிறது என்பதால் நம் வழக்கமான அளவைவிட அதிகமாக உண்ணக்கூடாது, அது பெரும் பிரச்சனையையே தரும்.
3.   வாரத்திற்கு ஒருமுறையாவது வெறும் நீரை மட்டுமே உட்கொண்டு, விரதம் இருத்தல் சிறந்தது. இது நம் உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவும்.
4.   எப்போதுமே பாதி வயிற்றுக்கு மட்டுமே சாப்பிட வேண்டும்.
5.   நமக்கு பிடித்த உணவை சாப்பிடும்போது, அந்த ஒரு நொடியில் நம் மனம் சொல்லும், இன்னும் கொஞ்சம் சாப்பிடுவோமே, நம் பிடித்த உணவுதானே, ஒருநாள் அதிகம் சாப்பிட்டால் ஒன்றும் ஆகாதென்று. அந்த நொடியில், நம் உணவை முடித்துக்கொண்டு எழுந்துவிட வேண்டும்.
6.   கடைகளில் விற்கப்படும் நொறுக்குத்தீனிகள், பாக்கெட்களில் அடைப்பட்ட உணவுகள், உணவகங்களில் உண்பது, நேரம் தவறி உண்பது, உண்ணும்போதும் உண்டபின்பும் உடனே அதிக தண்ணீர் பருகுவது, சாப்பிடும்போது பேசுவது, அல்லது தொலைக்காட்சி பார்ப்பது, மொபைல் பார்ப்பது, அரட்டை அடிப்பது, அல்லது வேறு சிந்தனையில் இருப்பது, இவற்றை தவிர்க்க வேண்டும்.
7.   உணவை உண்கையில் நம் கவனம் அனைத்தும் உணவில் மட்டுமே இருக்க வேண்டும். அதை நன்றாக மென்று, எச்சிலோடு சேர்த்து கூழாக்கி விழுங்க வேண்டும். நம் வயிற்றின் மீதான சுமையை நாம் இப்படி செய்வதனால் குறைக்கிறோம்.
8.   பழங்களும் காய்கறிகளும் அதிகம் உண்ணலாம்.
9.   அசைவ உணவுகளில் இருக்கும் சத்து நம் உடலுக்கு தேவைதான், அதுவும் அளவாக எடுத்துக்கொண்டால் நன்று. அளவு மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
10. உணவு தான் நமக்கு உயிர் கொடுக்கிறது. உணவுதான் மனிதனை நோயாளி ஆக்குகிறது. அதே உணவுதான் மனிதனை குணப்படுத்தவும் செய்கிறது. உணவை பொறுப்பாக கையாண்டால், உணவும் நம்மை பொறுப்பாக கையாளும்.


* தினேஷ்மாயா *

யாரிடமும் சொல்லாதே

Wednesday, May 27, 2020


உன் பிரச்சனைகளை ஒருவரிடம் சொல்லும் முன்னர், அந்த பிரச்சனையை அவரிடம் சொல்வதால் உனக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்பினால் மட்டுமே அதை அவரிடம் பகிர்ந்துக்கொள். இல்லையென்றால், உன் பிரச்சனையை யாரிடமும் சொல்லாதே !

உன் பிரச்சனை உனக்கு மட்டுமே பிரச்சனையாக தெரியும், பிறருக்கு அல்ல..

உன் மகிழ்ச்சியில் மகிழ்பவர்களைவிட, உன் பிரச்சனையால் மகிழ்பவர்களே இவ்வுலகில் அதிகம்...

* தினேஷ்மாயா *

யாரை எங்கே பாராட்டலாம்

Wednesday, May 20, 2020




“நேசனைக் காணா இடத்தில் நெஞ்சு ஆரவே துதித்தல்
ஆசானை எவ்விடத்தும் அப்படியே, வாச
மனையாளைப் பஞ்சணையில், மைந்தர் தமை நெஞ்சில்
வினையாளை வேலை முடிவில்”

- ஔவையார்

பொருள்: 

   நண்பனை அவன் இல்லாதபோது பாராட்டவேண்டும். ஆசானை எல்லா இடத்திலும் பாராட்டலாம். அவர் இருக்கும் போதும் பாராட்டலாம், இல்லாதபோதும் பாராட்டலாம். மனைவியை படுக்கையறையில் மட்டுமே பாராட்டவேண்டும். மகனை மனதில் மட்டுமே பாராட்டவேண்டும். வேலையாளை அவன் வேலை முடிந்தவுடன் தான் பாராட்டவேண்டும்.


* தினேஷ்மாயா *


வசந்த காலம்

Friday, May 08, 2020




பத்து வருடங்களுக்கு முன் இந்நேரம் நான் கல்லூரி இறுதி ஆண்டு முடித்து இருந்தேன். தேர்வுகள் முடிந்தாகிவிட்டது ஆனால் இன்னமும் பட்டம் வாங்கவில்லை.

திரும்பி பார்க்கிறேன் !

இன்று எதேச்சையாக என் Gmail – ஐ திறந்து, கடைசியில் இருந்து படிக்கத்துவங்கினேன். அப்பப்பா… எத்தனை எத்தனை அருமையான நினைவுகள். அன்று பேசிய பெரும்பாலான நண்பர்கள் இன்று தொடர்பில் இல்லையென்றாலும், அவர்களுடன் நான் பேசிய அந்த GTALK உரையாடல்களை திரும்ப படிக்கையில் மனம் புத்துணர்வு அடைகிறது. மீண்டும் கல்லூரியில் படிப்பதாய் ஓர் உணர்வை எனக்கு தருகிறது.

தேவதைப்போல் வந்த அவள், அவளுடன் படிக்கும் அனைவரும் எனக்கும் நண்பர்கள், என் வலைப்பக்க வாசகர்கள், என் பள்ளி நண்பர்கள், என் கல்லூரி நண்பர்கள் இப்படி என் மனதில் இடம்பிடித்த சிலருடனான உரையாடல்கள் என் மனதை வருடி செல்கிறது.

அன்றைய காலகட்டம் பெரும்பாலும், அவளுடைய நினைவுகளாலும் அவளுக்கான கவிதைகள் எழுதுவதிலும், என் வலைப்பக்கத்தை நிரப்புவதிலும், மனதிற்கு நெருக்கமான சில நண்பர்களுடன் பேசுவதிலுமே செலவழித்திருக்கிறேன் எனலாம்.

திரும்பவும் கிடைக்காத அந்த வசந்த காலத்தை இப்போது என் மனதில் அசைப்போட்டு பார்க்கிறேன். உள்ளம் மகிழவும் மனம் நெகிழவும் ஆனந்த கண்ணீர் வழிந்தோடி என் கைகளில் விழுகிறது…….

* தினேஷ்மாயா *