யாருக்கு தகுதியில்லை ?

Tuesday, March 31, 2020



பெரும்பாலான விஞ்ஞானிகள் இந்த உலகம் வாழத்தகுதி இல்லாத இடமாக மாறிவருகிறது என்பதால் வேறு கிரகங்களிலும் வேறு பால்வளியிலும் மனிதர்கள் வாழத்தகுதியான இடம் இருக்கிறதா என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், என்னைப் பொறுத்தவரை இந்த உலகில் வாழ மனிதனுக்குத்தான் தகுதி இல்லை என்பேன்.

கொரோனா தாக்குதலால் தற்போது உலகில் கிட்டத்தட்ட 170 கோடி மக்கள் வீட்டில் முடங்கி கிடக்கிறார்கள். மேலும், பல்வேறு நாடுகளிலும் மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதுப்போன்ற செயல்களால், மனிதனின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருப்பதாக கருதினாலும், இயற்கையின் இயல்பு வாழ்க்கை மென்மேலும் உயர்ந்திருக்கிறது எனலாம்.

ஆம். மனிதனின் ஆசைக்கும் பேராசைக்கும் அவன் இயற்கை வளங்களை அழித்தும் இயற்கையை மாசுப்படுத்தியும் வருகிறான். அது இப்போது வெகுவாக குறைந்திருக்கிறதை காணலாம். வாழவே தகுதியில்லாத நகரங்களின் பட்டியலில் இருந்த நகரங்கள் இப்போது மீண்டும் நல்ல காற்றை சுவாசிக்க நேர்ந்தது. மனிதனால் கொட்டப்படும் குப்பைகள் குறைந்திருக்கிறது. அவனால் வெளியேற்றப்படும் கரியமில வாயுக்கள் குறைந்துள்ளது. இயற்கை தன்னைத்தானே மீட்டெடுத்து வருகிறது.

இந்த கொரோனா தாக்குதல் ஏற்ப்படுத்திய சூழல், மனிதன் இயற்கையை எப்படி கொன்றுக்கொண்டிருக்கிறான் என்பதை நன்கு உணர்த்துகிறது. மேலும், மனிதன் தான் அந்த கொலைக்காரன் என்பதையும் உணர்த்துகிறது.

உலகம் அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது என்று பலர் எச்சரிக்கை மணி எழுப்பிய வண்ணம் இருக்கின்றனர். அவர்களுக்கு நான் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

உலகம் அழிவை நோக்கி செல்லவில்லை. மானுட இனம்தான் தன் அழிவை தானே சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது. மனித இனம் அழியும். ஆனால், அந்த மனித இனம் இல்லாத உலகம் தன்னை மீண்டும் புதுப்பித்துக் கொண்டு இன்னும் புத்துணர்வுடன் இயங்கிக்கொண்டேதான் இருக்கும். அந்த உலகில், கடலில் இருக்கும் ஒரு நீர்த்துளியாக, அல்லது சிறு புல்லாகவோ மீண்டும் பிறந்து இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து இயற்கையிலே கலந்துவிட விரும்புகிறேன்.

* தினேஷ்மாயா *

0 Comments: