ஊரடங்கு...

Friday, March 27, 2020



 கொரோனா முன்னெச்சரிக்கையாக 21 நாட்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களிலும், காட்சி ஊடகங்களிலும் இதற்கு வரவேற்பும், கொஞ்சம் எதிர்ப்பும் இருக்கத்தான் செய்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும், அன்றாடம் வருமானத்தை நம்பி இருப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும், கூலித்தொழிலாளர்கள், வேறு மாநிலத்தில் இருந்து வேலைக்கு வந்தவர்கள் இப்படி இதனால் பாதிப்படைவோரின் பட்டியல் நீள்கிறது. இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு விஷயத்தை நான் நினைவுக் கூற விரும்புகிறேன். கடந்த ஆண்டு, அதாவது 05-08-2019 முதல் ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த பதிவை நான் எழுதும் போது, இன்றோடு 226 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. நாம் 21 நாட்கள், நம் நலனுக்காக, நாட்டின் நலனுக்காக ஊரடங்கில் இருக்கவே மிகவும் கஷ்டப்படுகிறோம். ஆனால், அங்கே மக்கள், பலரின் அரசியல் நலனுக்காக அப்பாவி மக்கள் ஊரடங்கை ஏற்க மனமின்றி திணிக்கப்பட்டிருக்கிறார்கள். 
அவர்கள் அங்கே கஷ்டப்படுவதால் நானும் இங்கே கஷ்டப்பட வேண்டுமா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், நான் சொல்ல வருவது இதைத்தான். ஒடுக்குமுறை எங்கே நடந்தாலும் நாம் அதற்காக நம் குரலை கொடுப்போம். நாம் நேரடியாக அதில் பாதிப்படையாவிட்டாலும். அப்போதுதான், நம் குரல் ஒடுக்கப்படும்போது வேறொருவன் நமக்காக குரல் கொடுப்பான்.

இந்த சுய ஊரடங்கை பின்பற்றி கொரோனா  கொடுந்தொற்றை விரட்டி அடிப்போம்.

* தினேஷ்மாயா *

0 Comments: