கவனத்திற்கு...

Wednesday, January 02, 2019

Image result for income tax




     பல நாட்களாக இந்த விஷயத்தை நான் பகிரவேண்டும் என்றிருந்தேன். இன்றுதான் சரியான நேரம் கிடைத்திருக்கிறது. வங்கியில் கடன் வாங்க அணுகும்போது, வங்கி மேலாளர் உங்களின் கடந்த மூன்று ஆண்டுகளுக்கான வருமான வரி தாக்கல் செய்த படிவத்தை கேட்பார். அதோடு, உங்கள் வங்கி கணக்கின் பற்று வரவு எப்படி இருக்கிறது என்றும் பார்ப்பார். அதாவது உங்கள் வங்கி கணக்கில், Deposit & Withdrawal transactions எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பார். நீங்கள் ஏதாவது oரு வியாபாரம் செய்கிறீர்கள் என்றால், உங்கள் கணக்கில் அதை காட்டுகிறீர்களா என்று பார்ப்பார். எவ்வளவுக்கு எவ்வளவு நீங்கள் அதிக transactions செய்கிறீர்களோ அதைப்பொறுத்து உங்களுக்கு தொழில் கடன் வழங்க முன்வருவார். இதை தெரிந்துக்கொண்ட மக்கள், தங்கள் வங்கி கணக்கில் அதிக முறை பணத்தை செலுத்தி, அதை எடுத்து மீண்டும் கணக்கில் செலுத்துவர். பின்னர் அதை எடுத்து மீண்டும் செலுத்துவர். இப்படி செய்வதனால், உங்கள் வங்கி கணக்கில் அதிக பற்று வரவு செய்கிறீர்கள் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

     இதில் எந்தவித தவறும் இல்லை. ஆனால், இதில் மறைமுகமாக ஒரு சிக்கல் இருக்கிறது. வருமான வரித்துறை என்று ஒன்று இருக்கிறது  அது உங்கள் அனைவரின் கணக்கையும் கண்காணித்து வருகிறது என்பதை எவரும் அறிவதில்லை. வருமானவரித்துறையை பொறுத்தவரையில், வருடத்திற்கு ரூ.2,00,000/--க்கு மேல் உங்கள் சேமிப்பு கணக்கில் வரவு செலவு செய்துவந்தால், அந்த தகவலை வைத்து உங்களை தணிக்கை செய்யலாம்.
உதாரணமாக, வியாபாரி ஒருவர் கடை ஒன்றை நடத்தி வருகிறார். தனக்கு கிடைக்கும் பணத்தை வங்கி கணக்கில் செலுத்துகிறார். அதிலிருந்து எடுத்து மீண்டும் வரவு செலவு செய்கிறார். மீண்டும் தனக்கு வியாபாரத்தின் வாயிலாக கிடைக்கும் வருமானத்தை தன் வங்கி கணக்கில், குறிப்பாக தன் சேமிப்பு கணக்கில் செலுத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்படி செய்கையில், ஒரு ஆண்டுக்கு, அதாவது வருமானவரித்துறையை பொறுத்தவரை ஏப்ரம் மாதம் முதல் அடுத்த மார்ச் மாதம் வரையில், உங்கள் சேமிப்பு கணக்கில் சுமார் ரூ.25,00,000/- வரையில் பணத்தை செலுத்தியிருக்கிறீர்கள். ஆனால், அந்த வருடத்திற்கான உங்கள் வருமானவரி படிவத்தை நீங்கள் தாக்கல் செய்யவில்லையென்றால், வருமானவரித்துறை உங்களை தணிக்கை செய்ய அதிக வாய்ப்புகள் உண்டு. அதுவும், உடனேயே உங்களை தணிக்கை செய்யாவிட்டாலும், நீங்கள் வரவு செலவு செய்து ஆறு ஆண்டுகள் வரையிலும் எந்நேரத்திலும் உங்களை தணிக்கைக்கு உட்படுத்தலாம். உதாரணமாக. 2010-11 ஆண்டில் உங்கள் வங்கி சேமிப்பு கணக்கில் சுமார் 20 இலட்சம் வரையில் பணமாக செலுத்தி மீண்டும் எடுத்து வரவு செலவு செய்து, அந்த தணிக்கை ஆண்டுக்கான வருமானவரி படிவத்தை குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் தாக்கல் செய்யாமல் விட்டுவிட்டால், உங்களை 2017-ம் ஆண்டு தணிக்கை செய்யலாம். ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் செய்த வரவு செலவு கணக்கு இப்போது உங்களுக்கு நினைவில் இருக்க வாய்ப்பில்லை. அந்த 20 இலட்சம் ரூபாய்க்கான வருமான மூலம் என்ன என்பதை நீங்கள் சரியான ஆதாரங்களோடு நிரூபிக்க வேண்டும். இல்லாவிடில், சுமார் 8 முதல் 10 இலட்சம் வரையில் வரி செலுத்த வேண்டிவரும்.


    இதுபோன்ற சிக்கலில் இருந்து உங்களை காத்துக்கொள்ள, சில வழிமுறைகள் இருக்கிறது.

1.     உங்கள் Savings Account / சேமிப்பு கணக்கில் அதிகபட்சம் வருடத்திற்கு 

2 இலட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை Deposit செய்ய வேண்டாம்.

2.     அப்படி செய்வதானால், அதற்கான தகுந்த ஆதாரங்களை வைத்திருங்கள்.

3.     நீங்கள் எதுவும் வியாபாரம் செய்கிறீர்கள் என்றால், சேமிப்பு கணக்கில் பரிவர்த்தனைகள் செய்ய வேண்டாம். அதற்காக Current Account தொடங்கி அதில் பரிவர்த்தனைகள் செய்யவும். Current Account  / நடப்பு கணக்கு தொடங்க சில வங்கிகளில் அதிக பணம் கேட்கிறார்கள் என்று நினைத்து சேமிப்பு கணக்கில் பரிவர்த்தனைகள் செய்ய வேண்டாம். இது பின்னாளில் உங்களை சட்ட சிக்கலில் கொண்டு செல்லும்.

4.     வியாபாரம் செய்பவராக இருந்தால், அதற்கான வரவு செலவு கணக்கு புத்தகங்களை பராமரித்து வாருங்கள். Sales Ledger, Purchase Legder, Stock Ledger, Day Book / Cash Book, மற்றும் உங்கள் இதர வரவு செலவு கணக்குகளை பராமரித்து வாருங்கள்.

5.     இவை எல்லாவற்றைவும் விட, உங்களின் ஆண்டு வருமானம் ரூ.2,50,000/--க்கு மேல் இருந்தால் தவறாமல் உங்கள் வருமான வரி படிவத்தை உரிய நேரத்தில் தாக்கல் செய்யவும்.

    உங்களில் நலன் கருதி இதை இங்கே பதிவு செய்கிறேன். அனைத்து தகவல்களையும் பகிர முடியாவிட்டாலும், தேவையான முக்கியமான சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறேன். உங்களின் கேள்விகளுக்கு என்னை மின்னஞ்சல் வாயிலாக தொடர்புகொள்ளவும். dhineshmaya@gmail.com

* தினேஷ்மாயா *

0 Comments: