புது வருடம்:

Tuesday, December 20, 2016


புது வருடம்:
எல்லோரும் சொல்வதுதான். இப்போதுதான் ஜனவரி வந்தமாதிரி இருக்கு அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிருச்சு. இதையேதான் இவர்கள் காலம் காலமாக சொல்லி வருகிறார்கள். நொடியும், நிமிடமும், மணியும், நாளும், வாரமும், மாதமும், வருடமும் அது தன்னிச்சையாக ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. நாம்தான் ஒரே இடத்தில் அமர்ந்துக்கொண்டு காலத்தை கணித்துக்கொண்டும், அதை வெறுமனே வேடிக்கைப்பார்த்துக்கொண்டும் நமக்கு சொந்தமான காலத்தை நமக்கு சொந்தமில்லை என்கிற மாயையை நம்பி வீணடித்துக்கொண்டிருக்கிறோம்.
365/366 நாட்களுக்கு ஒருமுறை புதுவருடம் வந்துக்கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் எவ்வளவு வேகமாக கடந்த்து என்பது முக்கியமல்ல. இந்த வருடத்தில் நாம் சாதித்தது என்ன என்பதுதான் முக்கியம். சாதனை என்றால் நீங்கள் பெரிதாக எண்ண வேண்டாம். நோபல் பரிசோம் ஆஸ்கர் பரிசோ, பாரத ரத்னா பெறுவதுதான் சாதனை என்றில்லை. நம்முள் இருக்கும் நல்ல மனிதனை கண்டெடுத்து, அவனை இந்த சமூகத்திற்காக எதையாவது செய்ய விடவேண்டும். நம்முள்ளேயே எப்போதும் இருக்கும் அந்த நல்ல மனிதனை இந்த சமூகத்திற்கு தாரைவார்த்து கொடுப்பதும் ஒருவகை சாதனைதான்.
ஆம். சிறு சிறு விஷயங்களில் இருந்து தொடங்குவோம். முதலில் சிரிப்போம். நிபந்தனைகள் ஏதுமின்றி, எதிர்ப்பார்ப்புகள் ஏதுமின்றி. இதில் இரண்டுவகை உண்டு. நமக்கு தெரிந்தவர்களிடம் சிரித்து பேசுவது, நமக்கு அறிமுகம் இல்லாத நபர்களிடம் சிரித்து பேசுவது. பெரும்பாலும் நன் அன்றாட வாழ்வில் நமக்கு அறிமுகமில்லாத நபர்களையே அதிகம் சந்திக்க வேண்டி இருக்கும். அவர்களிடம் தவறாமல் சிரித்து பேசுங்கள், அப்படி முடியாவிட்டாலும் ஒரு புன்முறுவல் புரியுங்கள். இதுவே அன்றைக்கு நீங்கள் செய்த மிகப்பெரும் சாதனை.
நம் வீட்டிலோ, அலுவலகத்திலோ, பொது இடத்திலோ எங்காவது மின்சாரமோ, தண்ணீரோ வீணாவதை கண்டால் அதை சரிசெய்ய உங்களால் ஆன முயற்சியை மேற்கொள்ளுங்கள். அதில் நீங்கள் வெற்றிப்பெற்றாலும் வெற்றிப்பெறாவிட்டாலும் பரவாயில்லை. இயற்கையின் வளங்களை காக்க ஒரு முயற்சி செய்தீர்களே. அதுவே அன்றைய சாதனைதான்.
குப்பைகளை நீங்கள் இருக்கும் இட்த்திலேயே போடாமல், உங்கள் சட்டைப்பையிலோ, தோள்பையிலோ போட்டுக்கொண்டு, எப்போது குப்பைத்தொட்டியை பார்க்க நேர்கிறதோ அதின் அந்த குப்பையை போடுங்கள். இதில் பலருக்கு நீங்கள் முன்னுதாரணமாக இருப்பீர்கள்.
பேசுவதை குறைத்துவிட்டு, அதிக நேரம் அமைதியாக இருந்து என்ன காரியம் செய்ய முடியுமோ அதை செய்யுங்கள். புத்தகம் படிக்கலாம், இன்னிசை கேட்கலாம், தியானம், யோகா பழகலாம், படம் பார்க்கலாம், காலார நடந்து செல்லலாம், உடற்பயிற்சி செய்யலாக் இப்படி நிறைய உண்டு. முதலில் பேச்சை குறையுங்கள். நிம்மதி தானாக வரும். அதிக பேச்சுதான் பல பிரச்சனைகளுக்கு காரணம் என்பதை பின்னாளில் பட்டு தெரிந்துக்கொள்வதைவிட, இப்போதே தெரிந்துக்கொள்ளுங்கள்.
புதுப்புது இடங்களுக்கு பயணப்படுங்கள். அது உங்களுக்கு நிறைய அனுபவங்களை கொடுக்கும். அனைத்தும் வாழ்க்கைக்கு தேவையான அனுபவங்கள். எவ்வளவு காசு கொடுத்தாலும் எவரும் கற்றுகொடுக்க முடியாத அனுபவங்கள். உங்கள் பயணமே உங்கள் ஆசான்.
இந்த வருடம் நான் அதிகமாக எவர்க்கும் துன்பம் கொடுக்கவில்லை, என்னால் இன்பமுற்றவர்களே அதிகம், அதேபோல இந்த வருடம் எனக்கும் அதிகமாக எவரும் துன்பம் கொடுக்கவில்லை, என்னைச்சுற்றி நல்லவர்களே அதிகம் ஆகையால் இந்த வருடம் எனக்கு அதிக நன்மையே நடந்த்து என்று நீங்கள் எந்த வருடத்தை உணர்கிறீர்களோ அந்த வருடம் உங்கள் வாழ்நாளில் சிறப்பான் வருடம் என்று சொல்லலாம்.
இந்த வருடத்தில் புது வேலை கிடைத்த்து, புது வீடு வாங்கினேன், திருமணம் ஆனது, குழந்தை பிறந்த்து, புது நட்பு கிடைத்த்து என்பதெல்லாம் சாதனையாக கருத வேண்டாம். இதெல்லாம் இயற்கை. அது தானாக நடப்பது.
நீங்கள் உங்கள் சுய மேம்பாட்டுக்காக என்ன செய்கிறீர்கள் என்பதுதான் இங்கே அதி முக்கியம். ஆகையால், நீங்கள் வளர்ந்து மற்றவர்கள் வளர்ச்சிக்கும் உதவுங்கள்.
அப்போதுதான் பிறக்கும் வருடம் உண்மையாக புதுவருடமாக இருக்கும்.



அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

0 Comments: