மனிதன் பிறக்கும்போது குழந்தை எனப்படுகிறான். வாழும்போது அவனுக்கு இடப்பட்ட பெயரில் அழைக்கப்படுகிறான். இறந்தபிறகு பிணம் என அழைக்கப்படுகிறான். பிறந்து ஓரிரண்டு வயதுவரை மனிதனை அனைவரும் குழந்தை என அழைக்கிறோம். குழந்தை என்ன செய்யறான், குழந்தை சாப்பிட்டானா இப்படியெல்லாம் அழைக்கிறோம். அதற்குபிறகு இறக்கும்வரை அவனை பெயர் சொல்லி அழைக்கிறோம். இதெல்லாம் இருக்கட்டும். நான் இந்த பதிவை இங்கே எழுத காரணம் மனிதனின் கடைசி பெயர்தான்.
இன்று ஒரு இரங்கல் செய்தியை கேள்விப்பட்டேன். எட்டாவது படிக்கும் ஒரு சிறுவன் மன அழுத்தத்தின் காரணமாக தன் உடலில் தீவைத்துக்கொண்டு இறந்துவிட்டான் என்று. இதைப்பற்றி நண்பர் ஒருவர் தன் தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தார். BODY-ய எப்ப வீட்டுக்கு கொண்டு வராங்க என்று அவர் பேசியது என் காதில் கேட்டது. அந்த வார்த்தை மனதில் ஏதோ போல ஒலித்தது. இருக்கும் வரை ஒரு மனிதனுக்கு எவ்வளவு விஷயங்கள் நடக்கிறது. அவனை அரசன் என்கிறார்கள், ஆண்டி என்கிறார்கள். அவனவன் இருக்கும் நிலைக்கேற்ப மரியாதை என்ன வணக்கங்கள் என்ன பயம் என்ன பணம் என்ன பதவி என்ன அப்பப்பா.. என்னென்னவெல்லாம் அனுபவிக்கிறான் பாருங்கள் ஒரு மனிதன். இவ்வளவு இருந்தும், என்னதான் உலகையே தன் காலுக்கு கீழ் வைத்திருந்த ஆட்சியாளனேயானாலும், அவன் இறந்த பின் அவனை அவன் பெயர் சொல்லி அழைக்காமல் பிணம் என்று சொல்லித்தான் அழைக்கிறார்கள். இந்த உண்மை அனைவருக்குமே தெரியும் என்றாலும் அதை ஏற்க மறுத்து இறப்பதற்கு முன் எவ்வளவு ஆட முடியுமோ அவ்வளவு ஆடிவிடுகிறான் மனிதன்.
நிம்மதியான அமைதியான வாழ்க்கையைத்தான் அனைவரும் வாழ ஆசைப்படுகிறோம். நிம்மதியையும் அமைதியையும் ஏற்படுத்திக்கொள்வது நம் கைகளில்தான் உள்ளது. மற்றவர்க்கு தீங்கு விளைவிக்காமல் நம் வாழ்க்கையை அறநெறிகளுக்கு உட்பட்டு ஒழுங்காய் நடத்தி சென்றாலே நிம்மதியான வாழ்க்கையை வாழலாம். அப்படி வாழ்ந்து இறக்கும்போது நம்மையும் பிணம் என்றுதான் சொல்வார்கள், ஆனால் அதற்கும் மேல் ஒரு வார்த்தை சொல்வார்கள்.
“நல்ல மனுஷன்பா...”
* தினேஷ்மாயா *
1 Comments:
நல்லது... புரிதலுக்கு நன்றி....
Post a Comment