நண்பர் ஒருவர் வீட்டுக்கு சென்றேன். அவர் பையன் ஆறாவது படிக்கிறான். CBSE பள்ளி அது. எப்போதும் எனக்கு அந்த பள்ளியின் மீது ஒரு நன்மதிப்பு உண்டு. குழந்தைகளை மாணாக்கர்களாக உருவாக்காமல் நல்ல குடிமகனாக உருவாக்கும் பொறுப்பை அவர்கள் கையில் எடுத்துள்ளனர் என்று நினைத்து பெருமிதம் கொண்டேன்.
தற்போது தமிழக அரசின் சமச்சீர் கல்வியும் அதற்கு நிகராக வந்துவிட்டது மனதிற்கு மிகவும் ஆறுதலாய் இருக்கிறது.
இன்று அச்சிறுவனிடம் உரையாடிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் வருங்கால இந்தியா எந்த பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது என்பதை என்னால் உணர முடிந்தது. நாம் படிக்கும் போது இருந்த சூழல்தான் இன்றும் இருக்கிறது என்றாலும், அந்த சூழலைக் காட்டிலும் இன்றைய சூழல் பெரிதும் மாறியிருப்பதைக் கண்டேன்.
அப்படியென்ன மாற்றத்தைக் கண்டேன் என்கிறீர்களா. அது வெறுமனே வார்த்தையில் சொல்லிவிட முடியாது.
அவனது தாய்மொழி தமிழ். ஆனால், இதுநாள் வரையில் அவனுக்கு தமிழ் எழுதவோ படிக்கவோ தெரியாது. பேச மட்டும் தெரியும். இதற்கும், அவனது தாய்மொழி தமிழ். அவன் வசிப்பதோ சிங்கார சென்னையில்தா வேறு மாநிலத்திலும் அல்ல.
குழந்தைகளுக்கு சிந்திக்கும்படியான சூழலை நமது பள்ளிக்கூடம் உருவாக்குகிறதா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். எந்த சந்தேகமும் எழாமலே குழந்தைகள், வெறுமனே ஆசிரியர் சொல்வதை கேட்டுவிட்டு காலம் தள்ளுகின்றனர். அப்படியே கேள்வி எழுந்தாலும் அதை ஒருசில ஆசிரியர்கள்தவிர பெரும்பாலானோர் மாணவர்களின் சந்தேகங்களை சட்டை செய்வதே இல்லை.
சில நாட்களுக்கு முன்னர், அவன் என்னிடம் சில கணக்கு சந்தேகங்களை கேட்டான். நானும் அவனுக்கு எளிதாக புரியும் வண்ணம் எடுத்துச்சொல்லி விளக்கினேன். அவனது வீட்டுப்பாடத்திற்கும் அந்த எளிய நடைமுறையையே பயன்படுத்தி கணக்குப்போட சொன்னேன். இன்று மீண்டும் அவனைப்பார்க்கும்போது அவன் சொன்னான், அன்று நீங்கள் சொல்லிக்குடுத்த கணக்கு வழிமுறையை என் ஆசிரியரிடம் காட்டினேன். அவர்கள் என் தலையில் கொட்டி, நான் உனக்கு இந்த வழிமுறையை சொல்லித்தரவே இல்லையே என்று அவன் வீட்டுப்பாடம் முழுவதையும் அழித்துவிட்டு மீண்டும் எழுதிவர சொன்னார்களாம். எனக்கு அந்த ஆசிரியர் மீது பரிதாபம்தான் வந்தது.
ஒரு மாணவனுக்கு புரியும் வண்ணம் பாடம் நடத்தவேண்டும், ஆனால் அதை செய்யாமல் புத்தகத்தில் இருப்பதையே நடத்திவிட்டு செல்வதற்கு எதற்கு ஆசிரியர் எதற்கு பள்ளிக்கூடம் ?
பாடப்புத்தகம் இருந்தால் போதுமே, நானே எல்லா பாடங்களையும் எடுத்துவிடுவேனே. பள்ளிக்கு பிள்ளைகளை பாடம் கற்க மட்டும் அனுப்பவில்லை. ஆனால் பல பள்ளிகள் மாணவர்களுக்கு வெறும் பாடத்தை மட்டுமே திணிக்கின்றனர். விளையாட்டு, இதர திறமைகளை வளர்ப்பதில் எவரும் ஆர்வம் காட்டுவதில்லை.
இன்னும் ஒரு விஷயம் அவனிடம் பேசும்போது எனக்கு அதிர்ச்சியளித்தது. உனக்கு வயசு என்ன என்றேன். 11 என்றான். ஆறாவது படிக்கும் அவன் ஒரு நாளுக்கு 3 முறை சாப்பிடுவதாக சொன்னான். பார்ப்பதற்கு சராசரி உடம்புடன் இருந்தான். உன் வயதிற்கு நீ ஒரு நாளுக்கு 5 முறை சாப்பிட வேண்டும். நன்றாக ஓடி ஆடி விளையாட வேண்டும். மற்ற திறமைகளை எல்லாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னேன்.
அவன் சொன்னான், நான் அதிகம் சாப்பிட்டால் குண்டாக ஆகிடுவேன். அப்புறம் எல்லோரும் என்னை குண்டு என்று கேலிசெய்வார்கள் என்றான். மற்றவர் கேலி செய்வார்கள் என்பதற்காக இவ்ன் உணவை பெரும்பாலும் தவிர்க்கிறான் என்ற உண்மை என்னை அதிகம் பாதித்தது. பள்ளியில் மாணவர்களுக்கு தன் உடல்நலத்தைப்பற்றி ஆசிரியர்கள் கண்டிப்பாக சொல்லித்தர வேண்டும். பாடப்புத்தகத்தில் இருப்பதை மட்டுமே நடத்திவிட்டு போவது அல்ல ஒரு ஆசிரியரின் கடமை. அதற்கும் மேல் பல கடமைகள் உள்ளது.
பள்ளியில் விளையாட்டு வகுப்பு நேரத்திலும்கூட விளையாட விடாமல் படிக்க சொல்கிறார்களாம். 24 மணிநேரமும் படிப்பு படிப்பு என்றிருந்தால் மாணவர்களுக்கு படிப்பு மீது ஒரு வெறுப்புணர்ச்சிதான் வரும்.
மாற்றத்திற்கான விதையை மாணவர்களின் மனதில் விதைப்பது ஆசிரியரின் கடமை. அது நம் சமூகத்தின் கடமையும் கூட..
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment