தஞ்சை பெரிய கோவில்1000 ஆண்டு விழா..

Tuesday, September 28, 2010



சோழர்கள் ஆட்சி செய்த தஞ்சை நகருக்கும் நம் தமிழர்களின் கட்டிட திறமைக்கும் பெருமை சேர்க்கும் தஞ்சை பெரிய கோபுரம் கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தமிழக அரசு மிகப் பிரம்மாண்டமான நிகழ்ச்சியினை நடத்தியது.

நான் செப்டம்பர் 26, 2010 அன்று தஞ்சை சென்றிருந்தேன். செல்லும் வழியெங்கும் நெற்பயிர்கள் பரந்துகிடந்து கண்ணுக்கு இதமாய் இருந்தது. 

என் தோழி ஒருத்தி என்னை தஞ்சைக்கு வரவேண்டுமென அழைத்திருந்தாள். அவளின் அழைப்பை ஏற்று அங்கு சென்றிருந்தேன். தஞ்சை சரபோஜி மன்னரின் அரண்மனைக்கு முதலில் சென்றேன். பழங்கால அரிய பொக்கிஷங்கள் நிறைந்திருந்தது. அத்துனையும் சோழர்களின் திறமையை உலகிற்கு வெளிப்படுத்துவதாய் அமைந்திருந்தது. பின்னர் சோழர்காலத்து கல்வெட்டுக்கள், போர் கருவிகள், சிற்பங்கள், ஓவியங்கள், இசைக் கருவிகள், ஓலைச்சுவடிகள், பெரிய கோவிலின் மாதிரி, இன்னும் ஏராளமான பொருட்கள் காட்சிப் படுத்தப் பட்டிருந்தன.


என் மனதில் நிலைத்த ஒரு சிலவற்றை இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன்..

* புத்தர் சிலை - கி.பி 11-ஆம் நூற்றாண்டு
* மஹாவீரர் சிலை
* கண்காட்சியின் முகப்பு வாயிலில் கம்பீரமாய் நின்றிருந்த மாமன்னரின் சிலை
* கரிகாலன் எழுப்பிய கல்லணையின் புகைப்படம்
* தஞ்சை பெரிய கோவிலின் 19-ஆம் நூற்றாண்டு வரைப்படம்
* பெரிய கோவிலின் உருவம் பதித்த 1000 ரூபாய் நோட்டு. இது ஆங்கிலேயர்கள் காலத்தில் வெளிவந்தது. இப்போது இது நடைமுறையில் இல்லை.




* யாழ் இசைக்கருவி.. 
* ருத்ரவீணை இசைக்கருவி..
* வெளியே வைக்கப்பட்டிருந்த தலையாட்டி பொம்மைகள்
* கரிகாலன் போரில் வென்று கைப்பற்றி வந்த கலிங்க நாட்டு துர்க்கை அம்மன் சிலை
* ஓலைச்சுசடியில் பெரியபுராணம், திருக்குறள், தொல்காப்பியம் உரை
* தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்த பழங்கால தமிழ் எழுத்துக்கள்
* கும்பகோணம் கவின் கலை கல்லூரி மாணவர்கள் வரைந்திருந்த ஒவியங்கள்
* காவிரி ஆறு குடகு மலையில் தோன்றி தஞ்சை வழியாக கடலில் கலப்பதை சித்தரிக்கும் கட்டிட மாதிரி
* போர்க்கருவிகளில் என்னை மிகவும் கவர்ந்தது போர்வாள் தான். ஒவ்வொன்றும் ஒருவிதம். அனைத்தும் அருமையானதாக இருந்தது.
* சீதையின் சிலை
* புராண காலத்தினை விளக்கும் சுவரோவியங்கள்....

இன்னும் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
என் செல்போனில் சார்ஜ் இல்லை என்பதால் அதிகம் புகைப்படம் எடுக்க முடியவில்லை என்னால்.
ஆனால் அவை அனைத்தையும் என் மனதில் புகைப்படம் எடுத்து வைத்துள்ளேன்.

அடுத்து தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றேன். நீண்ட வரிசை இருக்குமென்று நினைத்தேன். இறைவன் எனக்கு சிரமம் தரவில்லை. சிறிய வரிசைதான் இருந்தது. இறைவனை காண நானும் வரிசையில் நின்றேன். மேலே மேகம் இல்லாத தெளிவான வானத்தில் நிலா ஒளிவீசிக் கொண்டிருந்தது. முதலில் அவனை வணங்கிக் கொண்டேன். சிவனை வழிப்படும் முன்னர், ஆஞ்சனேயன், வராஹி அம்மனை வழிப்பட்டுவிட்டு வந்து வரிசையில் நின்றேன். படியில் ஏறி ஈசனைக் காண சென்றேன். இடப்பக்கம் வினாயகர் அமர்ந்திருந்தார். அவரையும் வணங்கிவிட்டு கோவிலுனுள் காலடி எடுத்து வைக்கிறேன். கோவிலின் உள்ளே சென்றதும் மாமன்னரின் சிலை இடப்பக்கம் இருந்தது. அவரை வணங்கிவிட்டு தலையை நிமிர்த்து பார்த்ததும் என் அப்பன் ஈசன் என் கண் முன்னர் சற்று தொலைவில் இருந்தான். கண்களில் ஆனந்த கண்ணீரை தவிர வேறேதும் இல்லை. அவனை மனமுருகி தரிசித்துவிட்டு, எனக்காகவும் இந்த உலகிற்காகவும் வேண்டிக்கொண்டு வெளியே வந்தேன். பின்னர் கோவிலை ஒருமுறை சுற்றி வந்தேன். அப்போது தான் கீழே இருக்கும் இரண்டு புகைப்படங்களை எடுத்தேன். உங்களுடன் பகிர்ந்துக் கொண்டுள்ளேன். ஆர்வத்தில் எடுத்தது. க்ளாரிடி எல்லாம் பார்க்காதீங்க..

உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது ஒருமுறையாவது தஞ்சை பெரிய கோவிலுக்கும், அரண்மனைக்கும் சென்று வாருங்கள், அப்போது என் நினைவிருந்தால் என்னையும் அழையுங்கள். நானும் வருகிறேன் உங்களுடன். எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் தமிழகத்தின் நெற்களஞ்சியமான என் வீர சோழர்கள் ஆண்ட தஞ்சை பூமியை....


கோவிலின் உள்ளே செல்லும் முன்னர் எடுத்தது இது...




கோபுரத்தின் பின்புறம் இருந்து எடுத்தது இது...

என்றும் அன்புடன் -

தினேஷ்மாயா

0 Comments: