வானில் உலவும் வண்ணத்துப்பூச்சி
நீ இருக்கும் நெஞ்சத்துள் நுழைந்துவிட்டது...
தன் இராணியான
உன்னைக் காண...
* தினேஷ்மாயா *
வானில் உலவும் வண்ணத்துப்பூச்சி
நீ இருக்கும் நெஞ்சத்துள் நுழைந்துவிட்டது...
தன் இராணியான
உன்னைக் காண...
* தினேஷ்மாயா *
நான் வாழ்க்கையை முழுவதுமாக வாழ்ந்துவிட்டேனா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், இப்போழ்தே மரணம் என்னைத் தழுவினாலும் இவ்வுலகை விட்டு விடைப்பெற என் மனம் தயாராகிவிட்டது. வாழ்க்கையின் மீது துளியும் வெறுப்பில்லை. உலகின் மீதும், உலகத்து மானிடர்கள் மீதும்கூட எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை. வாழ்க்கை என்பதன் அர்த்தம் கொஞ்சம் கொஞ்சமாக எனக்குப் புரிய துவங்கியிருக்கிறது. அதனால், நான் கண்ட உண்மைகளை வெளியில் சொல்ல முடியாமல், எவருடனும் பேசுவதில் நாட்டம் காட்டாமல் இருக்கிறேன். உண்மை என்னவென்று உணர்ந்தவன், அதை பிறருக்கு சொல்ல விரும்பமாட்டான். ஏனென்றால், இங்கே இருப்பவர்கள் எவருக்கும் உண்மை என்பது ஒரு கசப்பான விடயம். அதை கேட்கும் பக்குவமோ, நேரமோ அல்லது பொறுமையோ இல்லை.
மனம் செம்மையாகிவிட்ட காரணத்தால், மரணம் ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை. மரணம்தானே. வந்தால் வரட்டுமே ! என்று மனம் தயாராகிவிட்டது !!
* தினேஷ்மாயா *
பெரும்பாலும் பலர் என்னிடம் "என்னாச்சு" என வினவும் நேரங்களில்
"ஒன்னுமில்லை" என்கிற பொதுவான பதிலையே அவர்களிடம் தூவிவிட்டு நடையை கட்டுகிறேன்.
அந்த "ஒன்னுமில்லை" அல்லது "Nothing. Am alright" என்னும் வாசகத்திற்குள் சொல்லி புரிய வைக்க முடியாத, சொல்ல முடியாத, சொல்ல விரும்பாத, சொல்லக் கூடாத, சொன்னால் மட்டும் புரிந்துவிடுமா, சொல்லி மட்டும் என்னாகப் போகிறது இப்படி பல அர்த்தங்கள் புதைந்திருக்கலாம்.
வலியை மறைத்துக்கொண்டு நான் உதிர்க்கும் அந்த குறும் புன்னகை, பின்னாளில் ரணமாய், ஆறா வடுவாய் என் மனதில் விருட்சமாய் வளர்ந்திருக்கும்..
* தினேஷ்மாயா *
நடமாடும் சாபமா நான் இங்கே இருக்க
எனக்கு வாழவே பிடிக்கலனு சொல்ற நிலைமை நம் எல்லோருக்கும் எப்போதாவது ஒரு கட்டத்தில் வந்திருக்கும். ஆனால் அத்தோடு நொடிந்துப் போகாமல், வாழ்வை எதிர்நோக்கி நடப்பதில்தான் வாழ்வின் சூட்சுமமே அடங்கி இருக்கிறது. அடுத்த நொடி நமக்கு பல ஆச்சரியங்களை மறைத்து வைத்திருக்கலாம், அதில் வலிகளும் கலந்திருக்கலாம். இரண்டும் கலந்ததுதானே வாழ்க்கை. கண்ணீர் சிந்தி வருந்துவதைவிட, வியர்வை சிந்தி உயர்வது உத்தமம்.
-தினேஷ்மாயா
என் ஒற்றை உயிர்
பல துண்டுகளாக உடைந்து
அந்த சலங்கைக்குள்
அடைந்து கிடக்கிறது..
நானே ஆடி ஆடி
என்னை உயிர்ப்பிக்கிறேன்..
* தினேஷ்மாயா *
அறம் என்பது ஆண்.
ஆண், அறத்துடன் நிற்றல் வேண்டும்.
பொருள் என்பது பெண்.
பெண், பொருளை நிர்வகிப்பதில் தனித்து விளங்க வேண்டும்.
அறமும் பொருளுமாகிய ஆணும் பெண்ணும் இணைந்தால் மட்டுமே நிலையான இன்பம் கிடைக்கும்.
இந்த தத்துவத்தையே வள்ளுவப் பெருந்தகை நமக்கு அருளியுள்ளார்..
* தினேஷ்மாயா *
பொதுமக்களின் மூடத்தனமே, இன்று பல்கிப் பெருகி இருக்கும் கார்ப்பரேட் சாமியார்களின் மூலதனம்.
* தினேஷ்மாயா *
செய்தித்தாளில் மட்டுமே செய்திகளைப் படித்துத் தெரிந்துக்கொண்டிருந்த வரையில், இந்த சமூகமும் நம் வாழ்க்கையும் ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது எனலாம்.
முன்பெல்லாம் உண்மையிலேயே எதாவது முக்கிய செய்தி இருந்தால் மட்டுமே, நிகழ்ச்சிகளை நிறுத்திவிட்டு Flash News என்று வாசிப்பார்கள்.
ஆனால், இன்று பல செய்தி சேனல்கள் வந்தபிறகு, ஆத்தூரில் கிணற்றில் மாடு விழுந்தது, தஞ்சையில் சாலையில் எதிர்கட்சி கவுன்சிலர் டீ குடித்தது, காஞ்சியில் இரு சாரார் இடையே நடந்த சிறு சண்டை, அடுத்த வாரம் வரும் புயலுக்கு இன்றிலிருந்தே முழுநேர கவரேஜ் இப்படி எதுவெல்லாமோ Flash News, Breaking News, Hot News என்று ஒளிபரப்பு செய்கிறார்கள்.
24 மணி நேர செய்தி சேனலை வைத்துக்கொண்டு செய்திகளுக்கு அவர்கள் என்ன செய்வார்கள். விளம்பரம்தான் அவர்களுக்கு மிகப்பெரிய வருமானம். அதை ஈர்க்க, இவ்வாறான செய்திகளை மக்களிடையே பரப்ப வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.
Business Ethics, News Ethics இதெல்லாம் மலையேறிவிட்டது.
Non Stop News என்று நிகழ்ச்சிப்பெயர் வைத்துவிட்டு 30 நிமிடத்தில் 20 நிமிடம் விளம்பரம் போடுகிறார்கள்.
இவர்கள் விவாத நிகழ்ச்சி நடத்துகிறேன் என்று உப்பு சப்பில்லாத விசயத்தை காரசாரமாக விவாதம் செய்கிறதாக எண்ணிக்கொண்டு தெருவில் இரவில் சண்டையிடும் விலங்கினங்கள் போல கத்துகிறார்கள்.
செய்தியாளரோ, ஒரு நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கே சென்று நேரலையில் தகவல் தருகிறேன் என்று கண்டதை உளறுகிறார். நீங்கள் இந்த காட்சியை பலமுறை கண்டிருப்பீர்கள்.
ஊடகம் என்பது உள்ளதை உள்ளவாறு மக்களுக்கு எடுத்துரைக்கும் காலம் போய், மக்களுக்கு எதை தெரியப்படுத்த வேண்டும் எதை தெரியப்படுத்தக் கூடாது என்று அவர்கள் முடிவு செய்து செய்திகளை ஒளிபரப்பு செய்கிறார்கள்.
ஊடக தர்மம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதை என்னால் உணர முடிகிறது.
"எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு"
* தினேஷ்மாயா *
சொல்லின் செல்வர் பலர் உண்டு.
எவர் ஒருவரின் சொல்லுக்கும் செயலுக்கும் அதிக இடைவெளி இல்லையோ அவரையே உயர்ந்த மனிதர் என நான் ஏற்பேன்.
அவ்வாறே, நானும் உயர்ந்த மனிதனாய் திகழ முயன்றும் வருகிறேன்..
* தினேஷ்மாயா *
I just wanted to post as much number of posts in 2020 as I did in the year 2019.
Last year I have tried to made 138 posts.
This year this is my 139th post.
(Wow. Somehow am progressing and not settling for the low).
Will be back by next year with much more interesting posts (which I have already noted down, but no time to pen it down).
Happy New Year All..
HOPE.. is the fuel for LIFE..
Be Positive. Better days are coming.......
Stay Happy...
Love You All..
See ya soonnnnn ....
* DhineshMaya*
உடலுக்குள்ளே ஒளிந்திருக்கும் உயிரின் நிறம் என்ன?
அதன் வடிவம் என்ன?
அது அழகாக இருக்குமா ?
அது அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்குமா?
இல்லை வேறுபடுமா?
பிரிந்த உயிர் எங்கே போகிறது?
உயிர் என்ற ஒன்று உண்மையாகவே இருக்கிறதா?
எங்கே அது இருக்கிறது?
அதன் அளவு என்ன?
*தினேஷ்மாயா *
தேசமெலாம் அலைந்து திரிந்து தேடி கண்டுக் கொண்டேன். தேகத்தினுள்தான் அவன் குடிக்கொண்டு இருக்கிறான் என்பதை.
என் உள்ளொளி பேரொளியாய் இருக்க, புற இருள் என்செய்யும்??
கட உள்ளத்தை. அங்கே உள்ளான் உன்
கடவுள்
*தினேஷ்மாயா *
நீ தீக்குச்சி
உன்னை உரசி பற்ற வைக்கும் ஒரு சிறு கருவியே ஆன்மீகம், மதம், கடவுள் இவையெல்லாம்.
உரசிய பிறகு பிரகாசிக்க வேண்டியது உன் ஒருவனின் கடமை மட்டுமே.
*தினேஷ்மாயா *
கல்லுக்கு ஊற்றுவதை ஏன் ஏழைகளுக்கு கொடுக்கக்கூடாது என கேட்கிறோம். ஆனால், சமூக ஊடகங்களில் பதிவிடும் அறிவுள்ள நாம், கல்லாதவர்களை நாடிச்சென்று அவர்களுக்கு எழுத்தறிவு புகட்டலாமே ?
ஆத்திகமோ நாத்திகமோ, எதுவாக வேண்டுமானாலும் இரு.
அதற்கு முன், மனிதனாய் இரு. அவனவன் மனத்திருப்தி அவனவனுக்கு...
*தினேஷ்மாயா *
உடலை எரிக்கையில் உயிரும் எரியுமோ ?
உடலோடு சேர்ந்து உயிரும் வளருமோ?
வலி என்பது உடலுக்குத்தானே. உயிருக்கும் வலிக்குமோ?
உயிர் உருவானபோது வலித்ததா? தெரியாது..
உயிர் பிரியும்போது வலிக்குமா? அதுவும் தெரியாது. உயிர் நீங்கிய எவரும் வந்து சொன்னதில்லை அவ்வுண்மையை.
* தினேஷ்மாயா *

கவலை இல்லாமலும்
கண்ணீர் வருமாப்போலே,
மழைகளில்லாமலும்
இவள் குடைகொண்டு நடக்கிறாள்.
என் அன்புமழை பிடித்திலையோ ?
* தினேஷ்மாயா *
“என்ன பெயர்
சொல்லி வேண்டுமானாலும்
எங்களைக் கூப்பிடுங்கள்
மனிதநேயம் ம(றை)றந்த
மனிதர்களே
என்னவோ போல் மட்டும்
எங்களைப் பார்க்காதீர்கள்..”
- ஆஷாபாரதி
சமீபத்தில் நான் படித்த ஒரு புதுக்கவிதை இது. படித்த அந்நொடியே என்னை கவர்ந்தது. குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கும் இந்த கவிதை, விளிம்புநிலை மாந்தகளான திருநங்கைகளின் உள்ளத்து உணர்வை நமக்கு திரையிட்டுக் காட்டுகிறது. அவர்களும் சமூகத்தில் சமமாக நடத்தப்பட வேண்டியவர்களே. இயற்கை செய்த பிழைக்கு, அவர்களுக்கு தண்டனை கொடுப்பது என்ன நியாயம்?
* தினேஷ்மாயா *
வேல்யாத்திரை சென்றும் பயனில்லை வேலவன்
குறவர்மருகன் என்பதை ஏற்காதபோழ்து..
- தினேஷ்மாயா
“க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் “
வேறொன்றுமில்லை
அவளைக்கண்டு
மெய்ம்மறந்தேனோ என்று
சுயபரிசோதனை செய்துக்கொண்டேன் !!
* தினேஷ்மாயா *
மரணிக்க எவரும் தயாரில்லை இக்கனமே
மரணிக்க வல்லான் ஞானி..
* தினேஷ்மாயா *
காதல் காமமாய் மாறுகையில் உணரலாம்
மனிதன் விலங்கின் மிச்சம்..
* தினேஷ்மாயா *
அன்பே அனைத்திற்கும் ஆதாரம் ஆகையால்
அதனுள் நீமூழ்கிப் போ.
* தினேஷ்மாயா *
இரவில் உறக்கமின்றி தொலைப்பேசியில் மூழ்கியோர்க்கு
ஆயுள்குறைவாம் அறிவியலாளர்கள் கண்டவுண்மை..
- தினேஷ்மாயா
இறையென மறையெனயேதும் தேவையில்லை அறமே தன்
வாழ்வின் நோக்காய் கொண்டவர்க்கு..
* தினேஷ்மாயா *மனதினுள் காதலுடன்
ஆழ்மனதில் கவலையுடன்
புறத்தே புன்னகையுடன்
கழுத்தில் மாலையுடன்
கைகூடாக் காதலின் பாரத்தோடு
குடும்ப மானமெனும் பாரமும் ஏற்றி
மணமேடை ஏறினாள்
மாதொருத்தி !!
* தினேஷ்மாயா *
திடிரென ஒரு ஆசை வந்தது. குறள் வெண்பா வடிவில் கவிதை எழுத முயற்சி செய்யலாமே என்று.
தொல்காப்பியர் வகுத்த இலக்கணத்தை மனதில் வைத்துக்கொண்டு எழுத இப்போதைக்கு முடியாது. அதை கைவர கற்கவில்லை யான் இன்னும்.
புதுக்கவிதை வடிவில் குறள் வெண்பா என் முதல் முயற்சி - இதோ
“ இமையாள் மைவிழியாள் என்னவள் நிகராகமாட்டாள்
உமையாள் என்னவள் பேரழகின்முன்”
* தினேஷ்மாயா *
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..