திருத்தொண்டத்தொகை

Wednesday, April 08, 2020





தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
  திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
  இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
  விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
  ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  1


இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்
  ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்
  கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
  எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன்
  ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  2


மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்
  முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்
  திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
  வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
  ஆரூரான் ஆரூரில் அம்மானுக் காளே.  3


திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
  திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்
  பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
  ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்
அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்
  ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  4


வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
  மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
  ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
  நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
  ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  5


வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
  மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
  செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்
கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கும் அடியேன்
  கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
  ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  6


பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்
  பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்
  விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
  கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
  ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  7


கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த
  கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
  நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
  தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்
  ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  8


கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்
  காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை
  மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்
புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
  பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்
  ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  9


பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
  பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
  திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
  முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்
  ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  10


மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
  வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்
  திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
  இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
  ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே.  11


அ௫ளியவர் : சுந்தரர்
திருமுறை : ஏழாம் திருமுறை (தேவாரம்)
பண் : கொல்லிக்கௌவாணம்
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
தலம் : ஆரூர்
சிறப்பு: திருத்தொண்டத்தொகை


திருத்தொண்டத் தொகை என்பது நாயன்மார்கள் 63பேர் மற்றும் தொகையடியார்கள் 9பேர் ஆகிய 72 சிவனடியார்களைப் பற்றி சுந்தர மூர்த்தி சுவாமிகள் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும்.

சுந்தர மூர்த்தி சுவாமிகள் ஒரு நாள் திருவாரூரில் தேவாசிரியன் மண்டபத்தில் குழுமியிருந்த சிவனடியார்களைப் பணியாது திருக்கோயிலினுள் சென்றார் என்ற தவறான எண்ணத்தில் விறன்மிண்டர் என்பவர் சுந்தரரையும் அவருக்கு அருள் செய்த சிவபிரானையும் “புறகு” என்று ஒதுக்கினார்.

அதனால் மனம் நொந்த சுந்தரருக்கு சிவபெருமான் அடியார் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையில் “தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்று அடியெடுத்துக் கொடுக்க, ஒவ்வொரு அடியாருக்கும் தான் அடியேன் எனக் கூறி “திருத்தொண்டத் தொகை” எனும் 11 பாடல்களைப் பாடி அருளினார்.

இந்தப் பாடல்களே சேக்கிழார் பெரியு புராணம் என்னும் நூல் எழுத உதவியாக இருந்தன. பெரியு புராணம் மூலம் நாயன்மார்கள் மற்றும் தொகையடியார்கள் வரலாறு  வெளியுலகுக்குத் தெரிய வந்தது.


* தினேஷ்மாயா *

வெண்ணிலவே வெண்ணிலவே ...



வெண்ணிலவே வெண்ணிலவே ...
விண்ணை தாண்டி வருவாயா?..
விளையாட.. ஜோடி தேவை..ஏய்....

வெண்ணிலவே வெண்ணிலவே ...
விண்ணை தாண்டி வருவாயா?..
விளையாட.. ஜோடி தேவை..ஏய்....

வெண்ணிலவே வெண்ணிலவே ...
விண்ணை தாண்டி வருவாயா?..
விளையாட.. ஜோடி தேவை..
இந்த பூலோகத்தில்  யாரும் பார்க்கும்முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம் ...

வெண்ணிலவே வெண்ணிலவே ...
விண்ணை தாண்டி வருவாயா?..
விளையாட.. ஜோடி தேவை..
இந்த பூலோகத்தில்  யாரும் பார்க்கும்முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம் ...


இது இருள் அல்ல , அது ஒளி அல்ல
இது ரெண்டொடும்  சேராத பொன்நேரம்...
இது இருள் அல்ல , அது ஒளி அல்ல
இது ரெண்டொடும்  சேராத பொன்நேரம்...
தலை சாயாதே விழி மூடாதே..
சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்..
பெண்ணே.. பெண்ணே..
பூலோகம் எல்லாமே தூங்கிபோன பின்னே,
புல்லோடு பூவிழும் ஓசை கேட்கும் பெண்ணே..
நாம் இரவின் மடியில் பிள்ளைகளாவோம் ..
பாலூட்ட  நிலவுண்டு...


வெண்ணிலவே வெண்ணிலவே ...
விண்ணைதாண்டி வருவாயா?..
விளையாட.. ஜோடி தேவை..
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும்முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம் ...

எட்டாத உயரத்தில்  நிலவை வைத்தவன் யாரு..
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு..
இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன்..
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு..
பெண்ணே.. பெண்ணே..
பூங்காற்று அறியாமல் பூவை திறக்க வேண்டும்..
பூக்கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்..
அட உலகை ரசிக்க வேண்டும் நான் ..
உன் போன்ற பெண்ணோடு...


வெண்ணிலவே வெண்ணிலவே ...
விண்ணை தாண்டி வருவாயா?..
விளையாட.. ஜோடி தேவை..
இந்த பூலோகத்தில்  யாரும் பார்க்கும்முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம் ...

படம்: மின்சார கனவு
இசை: AR ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து


* தினேஷ்மாயா *

என் கொரோனா கேள்விகள்




உலகையே அச்சுறுத்திவரும் கொரோனாவிற்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் பலவும் ஈடுபட்டிருக்கிறது. இன்றைய தேதியில் சுமார் பதினைந்து இலட்சம் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், சுமார் மூன்று இலட்சம் மக்கள் இதில்ருந்து குணமடைந்திருக்கிறார்கள், சுமார் என்பதாயிரம் மக்கள் இயற்கையோடு கலந்துவிட்டார்கள். இந்த நோய்க்கான தடுப்பூசியும், குணமாக்கும் மருந்தும் இன்னும் ஓராண்டிற்குள் சந்தைக்கு வந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அது சந்தைக்கு வந்தப்பின்னர் என்ன நடக்கும் என்றுதான் என் சிந்தனை.

உலகில் இருக்கும் அனைவருக்கும் அந்த தடுப்பூசியை போட முடியுமா? அவ்வளவு தடுப்பூசி கையிருப்பு இருக்குமா? அனைவருக்கும் தடுப்பூசி சாத்தியம் இல்லை என நினைக்கிறேன். அப்படி இருக்கையில், பணம் படைத்தவர்களால் மட்டுமே இந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்ள முடியும். அப்படியானால், இந்த தடுப்பூசியை ஏழை எளிய மக்கள் எடுத்துக்கொள்ள முடியாதா? அல்லது அது அவர்களை சென்றடைய பல ஆண்டுகள் ஆகும் அல்லவா. அதுவரை இதன் தாக்கத்தில் இருந்து அவர்களை எப்படி பாதுகாப்பது? ஒருவேளை இந்த தடுப்பூசியை கண்டுபிடிக்கும் நிறுவனம் மனிதாபிமான அடிப்படையில் இதை இலவசமாக விநியோகம் செய்யுமா? அதை பெருமுதலாளிகள் அனுமதிப்பார்களா? கருவறை முதல் கல்லறைவரை அனைத்திலும் பணம் சம்பாதிக்கும் இந்த மனித கூட்டம் இந்த விஷயத்தில் என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
* தினேஷ்மாயா *

அன்பின் அத்தனையும் நீயே


       அன்பின் அர்த்தம் நீ தான். தாயின் அன்பிற்குப்பிறகு நான் அதிகம் விரும்பிய அன்பு உன்னுடையது. வளர்பிறை போல என்றும் வளர்ந்துக்கொண்டேதான் இருக்கிறது உன் அன்பு. காரணமின்றியே சண்டை வரும் நமக்குள். ஆனாலும், நான் சமாதானம் செய்யாமலேயே உன்னை என்னிடம் பேச வைத்துவிடும் உன் அன்பு. நான் உன்னை நேசிப்பதைவிட உன் அன்பை அதிகம் நேசிக்கிறேன். இரண்டிற்கும் வித்தியாசம் ஏதுமில்லை. உனக்கு உருவம் உண்டு ஆனால் உன் அன்பிற்கு உருவம் இல்லை. இருப்பினும், உன் அன்பின் வெளிப்பாடாக உன் செயல்கள் இருக்கிறதே. குழந்தையை வளர்ப்பதுபோலவே என்னையும் வளர்த்தெடுக்கிறாய் நீ. உருவத்தில் வளர்ந்து உள்ளத்தில் வளர்ச்சி இல்லாத என் மனநிலையை என்னைவிட நன்கு உணர்ந்தவள் நீயே. நான் உன்னிடம் கோபம் கொண்டதைவிட நீ என்மேல் கோபம் கொண்டதே அதிகம். என்மேல் நீதான் அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறாய் என்பத அடையாளமோ இந்த கோபம் எல்லாம் ? கனவிலும் நினைவிலும் நீதான் என்று பாடல் வரிகளில் கேட்டதுண்டு. அதன் அர்த்தம் என்னவென்பதை என் மனதார உணர்கிறேன். சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் இறைவனை நோக்கி இப்படிப் பாடுவார் ”இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க”. அதுபோலவே நீயும் எனக்கு. நான் இமைக்கும் அந்த நொடிகளிலும்கூட என் மனதைவிட்டு என் நினைவிட்டு நீங்காமல் என்னுள்ளேயே இருக்கிறாய் நீ. காலம் கடந்து, நடை தளர்ந்து, நரை படர்ந்து, பற்களால் எதையும் அசைப்போட முடியாத அந்த கடைசி நாட்களில் நான் உன் அன்பையும் நம் காதலையும் அந்த பேரழகான நினைவுகளையும் ஆனந்த கண்ணீரோடு அசைப்போட்டுக்கொண்டே இருப்பேனடி...

* தினேஷ்மாயா *

வண்ணத்துப்பூச்சி


வண்ணமில்லா வண்ணத்துப்பூச்சி - என்

வாழ்வை வண்ணமயமாக்கும்

வண்ணத்துப்பூச்சி நீ !

* தினேஷ்மாயா *


காதலின் முடிவு


இன்றைய காதல் எல்லாம் கல்யாணத்தில் முடிகிறதா என்று தெரியவில்லை. ஆனால், பெரும்பாலும் காமத்தில் முடிகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

* தினேஷ்மாயா *