துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா? - நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா? - கண்ணே
அல்லல் நீக்க மாட்டாயா?
வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வின் உணர்வு சேர்க்க - எம்
வாழ்வின் உணர்வு சேர்க்க - நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே
ஆடிக் காட்ட மாட்டாயா?
அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே
அறிகிலாத போது - யாம்
அறிகிலாத போது - தமிழ்
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ
இயம்பிக் காட்ட மாட்டாயா?
புறம் இதென்றும் நல் அகம் இதென்றுமே
புலவர் கண்ட நூலின் - தமிழ்ப்
புலவர் கண்ட நூலின் - நல்
திறமை காட்டி உனை ஈன்ற எம்உயிர்ச்
செல்வம் ஆகமாட்டாயா? தமிழ்ச்
செல்வம் ஆக மாட்டாயா?
- பாரதிதாசன் -
இந்த வரிகளை பாடல்களாக கேட்டுப்பாருங்கள். அற்புதமாக இருக்கும். Youtube-ல் நிறைய பேர் பாடியுள்ளனர். ஓர் இரவு என்னும் பழைய தமிழ் திரைப்படத்திலும் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment