காலா

Monday, October 29, 2018




    இந்தத் திரைப்படம் வெளிவந்து நான்கு மாதங்களுக்கு மேல் ஆகி இருந்தாலும் இதை நான் நேற்று தான் முதன் முதலாக பார்த்தேன். நேர்த்தியாக செதுக்கப்பட்ட ஒரு சிலையைப் போல இருந்தது இந்த திரைப்படம். இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் மிகவும் சாமர்த்தியமாக, நேர்த்தியாக இந்த கதையை வடித்துள்ளார். தான் சொல்ல வந்த கருத்தை அவ்வளவு அழகாக, எளிமையாக அனைவருக்கும் புரியும்படி சொல்லி இருக்கிறார். படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுமே அருமையாக வாழ்ந்திருக்கிறார்கள்.இது ஒரு திரைப்படம் என்று சொல்ல முடியவில்லை. இது ஒரு வாழ்வியல், ஒரு வாழ்க்கை. அந்த தாராவி மக்களின் வாழ்க்கையை அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பொருளாதார, சமுதாய, வாழ்வாதாரப் பிரச்சினைகளை பற்றி பேசும் ஒரு வாழ்வியல் சார்ந்த ஒரு கலை. இந்த படத்திற்கு இசை ஒரு மிகப்பெரிய பலம் . படத்தோடு பாடல்களை கேட்கும் பொழுது அழகாக இருக்கிறது. எனக்கு இந்தப் படம் மீது ஒரு அதிக ஈர்ப்பு வருவதற்கான காரணம் "உரிமையை மீட்போம் " என்கிற பாடல். அந்த பாடல் வரும் அந்த காட்சிதான் படத்தின் ஆணிவேர் என்று எனக்கு தோன்றியது. "யார் வெச்சது யார் வெச்சது உன் சட்டமடா.. வாழ்வென்பது சாவதும் நிலம் மட்டுமடா". இந்தப் பாடல் என்னவோ தெரியவில்லை திரும்ப திரும்ப கேட்கத் தூண்டியது அந்த காட்சிகளை திரும்ப திரும்ப பார்க்க தூண்டியது. மக்களின் குறையை அவர்களின் பிரச்சனையை எழுத்து மூலமாக இசை மூலமாக காட்சி மூலமாக நமக்கு அருமையாக தந்திருக்கிறார். மற்ற பாடல்களும் ரசிக்கும்படியாக இருந்தது. படத்தில் சொல்லப்பட்டிருக்கிற, பேசப்பட்டிருக்கிற நிலம் சார்ந்த அரசியல் இன்றல்ல நேற்றல்ல பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது. இன்னும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆனாலும் இருக்கும். சமத்துவம் என்பது பிறந்தால் மட்டுமே இந்த நிலை மாறும். அதை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் அவர்கள்.

   படத்தில் நான் ரசித்த பல காட்சிகள் இருக்கிறது. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ரஜினி அவர்களின் முதல் காட்சியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பார். அதில் அவர் தன் முதல் introduction காட்சியிலேயே கிளீன் போல்டு ஆகி விடுவார். அந்தக் காட்சியில் சூப்பர் ஸ்டார் என்கிற ஒரு மிகப்பெரிய பிம்பத்தை உடைத்து அவரை ஒரு அருமையான நடிகனாக பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர். அந்த நடிகனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னொருவர் காலில் விழுந்து வணங்குவது சமத்துவம் அல்ல அவரிடம் கைகுலுக்கி சமமாக நடத்துவதே சிறந்தது என்று ஒரு காட்சி வரும். அந்த காட்சி மிகவும் பிடித்திருந்தது.  கருப்பு என்பது அழுக்கு வெள்ளை என்பது அழகு என்று இந்த சமூகத்தில் நிலவி வரும் ஒரு மாயையை செருப்பை கொண்டு அடித்திருக்கிறார் இயக்குனர். கருப்பு என்பது அழுக்கு அல்ல கருப்பு என்பது வண்ணம் உழைக்கும் மக்கள் வாழ்வியலின் ஒரு அங்கம் என்று உரக்க சொல்லி இருக்கிறார். வெள்ளை என்பது அழகு அல்ல கருப்பு என்பது அழுக்கு அல்ல. கருப்பு என்பது ஒரு அழகு என்று ஆழமாக பதிவு செய்திருக்கிறார். படத்தில் ரஜினி அவர்களின் மனைவியாக வரும் செல்வி கதாபாத்திரம் ரொம்ப கவர்ந்தது. அவரின் மகனாக வரும் கதாபாத்திரம் கொஞ்சம் ஈர்த்தது. அதிலும் அவர் படத்தின் முதல் பாதியில் புரட்சியாளராக போராட்டம் செய்பவராக வருவார் அப்பொழுது அவர் சட்டையின் நிறம் சிவப்பு நிறத்தில் இருக்கும். படத்தின் பிற்பாதியில் அவர் உடுத்தும் சட்டையின் நிறம் பெரும்பாலும் நீல நிறமாக இருக்கும். என்னை பொருத்தவரை ரஞ்சித் அவர்களின் திரைப்படங்களில் கருப்பு என்பது பெரியாரை குறிக்கிறது சிவப்பு என்பது காரல் மார்க்சை குறிக்கிறது நீலம் என்பது அண்ணல் அம்பேத்கரை குறிக்கிறது என்று நான் புரிந்து வைத்திருக்கிறேன் அது இயக்குனர் அவர்களின் காட்சிகளின் வழியாக நிரூபனம் ஆகிறது. திரைப்படத்தின் அந்த கதாபாத்திரத்தின் பெயர் லெனின் அதுவும் ஒரு புரட்சியாளனின் பெயர்தான். 

    தாராவி மக்கள் வாழ்வாதாரத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அவர்களின் வாழ்க்கை முறையில் இருக்கும் அந்த ஒரு அழகு, மகிழ்ச்சி , சந்தோஷம் அதை அழகாக பதிவு செய்திருக்கிறார். சேரிவாழ் மக்கள் என்றாலே குற்றம், கொலை, குரோதம், திருட்டு என்று மட்டுமே காட்டிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவில் சேரி வாழ் மக்களின் வாழ்க்கையில் இருக்கும் உண்மையான அன்பை நமக்கு காட்டி இருக்கிறார் இயக்குனர். ரஞ்சித் அவர்களின் திரைத்துறை பயணத்தில் இந்தப் படம் நிச்சயம் ஒரு மைல் கல் என்று நான் சொல்வேன் அவரின் இதற்கு முன் வெளிவந்த மூன்று படங்களை காட்டிலும் இந்த படம் அவர் சொல்ல விரும்பிய அரசியலை ஆழமாக தீர்க்கமாக சொல்லி இருக்கிறது என்று நான் உணர்கிறேன். அவரின் அடுத்த படத்திற்காக காத்திருக்கிறேன். காலா திரைப்படத்தின் படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் இப்படி ஒரு திரைப்படத்தை நமக்கு தந்தமைக்கு நன்றிகள் பல.


* தினேஷ்மாயா *

0 Comments: