உரிமையை மீட்போம்...

Monday, October 29, 2018



உரிமையை மீட்போம்...
உரிமையை மீட்போம்...
உரிமையை மீட்போம்...
உரிமையை மீட்போம்...
உரிமையை மீட்போம்...

யார் வெச்சது யார் வெச்சது உன் சட்டமடா.
இங்க வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா.
யார் வெச்சது யார் வெச்சது உன் சட்டமடா.
இங்க வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா.

எவனோ வந்து விதச்சான்
 அத எவனோ வந்து அறுத்தான்,
ரொம்ப கருத்தா அத வளர்த்த இவன்
 பசியா துடிச்சான்.

முறையா தல முறையா
வழி வழியாய் இன மொழியாய்
அட பிரிந்தே கிடந்தவனும்.
இப்போ நிமிர்ந்தான் நிமிர்ந்தான்.

நிலமே எங்க உரிமை
நிலமே எங்க உரிமை உரிமை உரிமை
நிலமே எங்க உரிமை
நிலமே எங்க உரிமை உரிமை உரிமை

இடியாய் ஒரு புயலா
வந்து இரங்கும் நம்ம படையும்
அத தடுத்தா எந்த கரையும்
இனி உடையும் உடையும்.

விதையாய் சின்ன விதையாய்
வந்து விழுந்தோம் சிறு துளியாய்
சதை கிழிந்தே மெல்ல எழுந்தோம்
 பெரும் மழையாய் மழையாய்ய்ய்.

புழுதி உடையாய் அணிந்தே
வியர்வை நெடியால் குனிந்தே
குருதி வழிய வரைந்தோம்
அதுதான் உலகே.

விடியும் விடியும் என்றே
 இருளில் கிடந்தோம் இன்றே
ஒளியை திறந்தோம்
 ஒன்றாய் சேர்ந்தே சேர்ந்தே...

நிலமே எங்க உரிமை
நிலமே எங்க உரிமை உரிமை உரிமை
நிலமே எங்க உரிமை
நிலமே எங்க உரிமை உரிமை உரிமை

யார் வெச்சது யார் வெச்சது உன் சட்டமடா.
இங்கு வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா.

நிலமே எங்க உரிமை.

ஆளவும் இல்லடா
அடிமையும் நீ இல்லடா
காடெல்லாம் மேடெல்லாம்
முளைத்தது உன் நிலம்டா.

அடங்கி வாழ்ந்தாக்க முடியாதம்மா.
உரிமையை வாங்காம உயிர் போகுமா.

எழுந்து வாடா வாடா.
எதிர்த்து நீ கேளுடா
பயந்தா ஆகதுடா
இனமே உன்கூடதான்

நிலத்த மீட்டுக்கலாம்
நிலைமை மாத்திக்கலாம்
ஒன்னாக இருந்தா
இனி நம்ம காலம்தான்.

நிலமே எங்க உரிமை
நிலமே எங்க உரிமை உரிமை உரிமை
நிலமே எங்க உரிமை
நிலமே எங்க உரிமை உரிமை உரிமை

வண்ணங்கள தீட்டு
இது வானவில்லின் கூத்து.
அட சொந்தம் ஏது கேட்டா
அந்த விண்மீன காட்டு.

கதவில்லாத கூட்டில்
கனவுகள் ஏராளம் உண்டு.
உரிமைக்கு ஒன்றாகும் வீட்டில்
விடுதலை எப்போதும் உண்டு.

அதிகாரம் தொட்டு
நினைப்ப மாத்திக்காட்டு
உழைக்கும் கைகளுக்கே நாடு நாடு.

அடக்கும் காலம் இல்ல
நமக்கும் வேலி இல்ல
வெடித்து போரடலாம் பயமே இல்ல.

நிலமே எங்க உரிம
நிலமே எங்க உரிமை உரிமை உரிமை
நிலமே எங்க உரிமை
நிலமே எங்க உரிமை உரிமை உரிமை

யார் வெச்சது யார் வெச்சது உன் சட்டமடா.
இங்கு வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா.

உரிமையை மீட்போம்..
உரிமையை மீட்போம்...
உரிமையை மீட்போம்...
உரிமையை மீட்போம்...
உரிமையை மீட்போம்...
உரிமையை மீட்போம்...
யார் வெச்சது யார் வெச்சது உன் சட்டமடா.
இங்கு வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா
மீட்போம்
மீட்போம்
மீட்போம்
உரிமையை மீட்போம்...
உரிமையை மீட்போம்...
உரிமையை மீட்போம்...
யார் வெச்சது யார் வெச்சது உன் சட்டமடா.
இங்கு வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா.

படம் : காலா (2018)
இயக்குனர்: பா.ரஞ்சித்
இசை: சந்தோஷ் நாராயணன்

காலா




    இந்தத் திரைப்படம் வெளிவந்து நான்கு மாதங்களுக்கு மேல் ஆகி இருந்தாலும் இதை நான் நேற்று தான் முதன் முதலாக பார்த்தேன். நேர்த்தியாக செதுக்கப்பட்ட ஒரு சிலையைப் போல இருந்தது இந்த திரைப்படம். இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் மிகவும் சாமர்த்தியமாக, நேர்த்தியாக இந்த கதையை வடித்துள்ளார். தான் சொல்ல வந்த கருத்தை அவ்வளவு அழகாக, எளிமையாக அனைவருக்கும் புரியும்படி சொல்லி இருக்கிறார். படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுமே அருமையாக வாழ்ந்திருக்கிறார்கள்.இது ஒரு திரைப்படம் என்று சொல்ல முடியவில்லை. இது ஒரு வாழ்வியல், ஒரு வாழ்க்கை. அந்த தாராவி மக்களின் வாழ்க்கையை அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பொருளாதார, சமுதாய, வாழ்வாதாரப் பிரச்சினைகளை பற்றி பேசும் ஒரு வாழ்வியல் சார்ந்த ஒரு கலை. இந்த படத்திற்கு இசை ஒரு மிகப்பெரிய பலம் . படத்தோடு பாடல்களை கேட்கும் பொழுது அழகாக இருக்கிறது. எனக்கு இந்தப் படம் மீது ஒரு அதிக ஈர்ப்பு வருவதற்கான காரணம் "உரிமையை மீட்போம் " என்கிற பாடல். அந்த பாடல் வரும் அந்த காட்சிதான் படத்தின் ஆணிவேர் என்று எனக்கு தோன்றியது. "யார் வெச்சது யார் வெச்சது உன் சட்டமடா.. வாழ்வென்பது சாவதும் நிலம் மட்டுமடா". இந்தப் பாடல் என்னவோ தெரியவில்லை திரும்ப திரும்ப கேட்கத் தூண்டியது அந்த காட்சிகளை திரும்ப திரும்ப பார்க்க தூண்டியது. மக்களின் குறையை அவர்களின் பிரச்சனையை எழுத்து மூலமாக இசை மூலமாக காட்சி மூலமாக நமக்கு அருமையாக தந்திருக்கிறார். மற்ற பாடல்களும் ரசிக்கும்படியாக இருந்தது. படத்தில் சொல்லப்பட்டிருக்கிற, பேசப்பட்டிருக்கிற நிலம் சார்ந்த அரசியல் இன்றல்ல நேற்றல்ல பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது. இன்னும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆனாலும் இருக்கும். சமத்துவம் என்பது பிறந்தால் மட்டுமே இந்த நிலை மாறும். அதை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் அவர்கள்.

   படத்தில் நான் ரசித்த பல காட்சிகள் இருக்கிறது. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ரஜினி அவர்களின் முதல் காட்சியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பார். அதில் அவர் தன் முதல் introduction காட்சியிலேயே கிளீன் போல்டு ஆகி விடுவார். அந்தக் காட்சியில் சூப்பர் ஸ்டார் என்கிற ஒரு மிகப்பெரிய பிம்பத்தை உடைத்து அவரை ஒரு அருமையான நடிகனாக பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர். அந்த நடிகனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னொருவர் காலில் விழுந்து வணங்குவது சமத்துவம் அல்ல அவரிடம் கைகுலுக்கி சமமாக நடத்துவதே சிறந்தது என்று ஒரு காட்சி வரும். அந்த காட்சி மிகவும் பிடித்திருந்தது.  கருப்பு என்பது அழுக்கு வெள்ளை என்பது அழகு என்று இந்த சமூகத்தில் நிலவி வரும் ஒரு மாயையை செருப்பை கொண்டு அடித்திருக்கிறார் இயக்குனர். கருப்பு என்பது அழுக்கு அல்ல கருப்பு என்பது வண்ணம் உழைக்கும் மக்கள் வாழ்வியலின் ஒரு அங்கம் என்று உரக்க சொல்லி இருக்கிறார். வெள்ளை என்பது அழகு அல்ல கருப்பு என்பது அழுக்கு அல்ல. கருப்பு என்பது ஒரு அழகு என்று ஆழமாக பதிவு செய்திருக்கிறார். படத்தில் ரஜினி அவர்களின் மனைவியாக வரும் செல்வி கதாபாத்திரம் ரொம்ப கவர்ந்தது. அவரின் மகனாக வரும் கதாபாத்திரம் கொஞ்சம் ஈர்த்தது. அதிலும் அவர் படத்தின் முதல் பாதியில் புரட்சியாளராக போராட்டம் செய்பவராக வருவார் அப்பொழுது அவர் சட்டையின் நிறம் சிவப்பு நிறத்தில் இருக்கும். படத்தின் பிற்பாதியில் அவர் உடுத்தும் சட்டையின் நிறம் பெரும்பாலும் நீல நிறமாக இருக்கும். என்னை பொருத்தவரை ரஞ்சித் அவர்களின் திரைப்படங்களில் கருப்பு என்பது பெரியாரை குறிக்கிறது சிவப்பு என்பது காரல் மார்க்சை குறிக்கிறது நீலம் என்பது அண்ணல் அம்பேத்கரை குறிக்கிறது என்று நான் புரிந்து வைத்திருக்கிறேன் அது இயக்குனர் அவர்களின் காட்சிகளின் வழியாக நிரூபனம் ஆகிறது. திரைப்படத்தின் அந்த கதாபாத்திரத்தின் பெயர் லெனின் அதுவும் ஒரு புரட்சியாளனின் பெயர்தான். 

    தாராவி மக்கள் வாழ்வாதாரத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அவர்களின் வாழ்க்கை முறையில் இருக்கும் அந்த ஒரு அழகு, மகிழ்ச்சி , சந்தோஷம் அதை அழகாக பதிவு செய்திருக்கிறார். சேரிவாழ் மக்கள் என்றாலே குற்றம், கொலை, குரோதம், திருட்டு என்று மட்டுமே காட்டிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவில் சேரி வாழ் மக்களின் வாழ்க்கையில் இருக்கும் உண்மையான அன்பை நமக்கு காட்டி இருக்கிறார் இயக்குனர். ரஞ்சித் அவர்களின் திரைத்துறை பயணத்தில் இந்தப் படம் நிச்சயம் ஒரு மைல் கல் என்று நான் சொல்வேன் அவரின் இதற்கு முன் வெளிவந்த மூன்று படங்களை காட்டிலும் இந்த படம் அவர் சொல்ல விரும்பிய அரசியலை ஆழமாக தீர்க்கமாக சொல்லி இருக்கிறது என்று நான் உணர்கிறேன். அவரின் அடுத்த படத்திற்காக காத்திருக்கிறேன். காலா திரைப்படத்தின் படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் இப்படி ஒரு திரைப்படத்தை நமக்கு தந்தமைக்கு நன்றிகள் பல.


* தினேஷ்மாயா *

இத்தனை வகைகளா ?

Wednesday, October 10, 2018



உணவில் பலவகை இருக்கும் என அறிந்திருக்கிறேன்.

உப்புமாவில் இத்தனை வகைகளா ??

எங்கிருந்து கற்றுக்கொண்டாய் இந்த க(கொ)லையை !?

* தினேஷ்மாயா *

என் மனைவிக்கு



தினமும் காலையில்

உப்புமா....

அது ரொம்ப பெரிய

தப்புமா....

* தினேஷ்மாயா *

பூணூல்

Thursday, October 04, 2018



நூல் அறிந்தவனைவிட
(புத்தகங்கள் கற்றவனைவிட)

நூல் அணிந்தவனுக்கே

இங்கு அனைத்திலும் முன்னுரிமை !!

இதுவே நிதர்சனமான உண்மை

* தினேஷ்மாயா *

கருப்பு என்கிற கருப்பன்....

Wednesday, October 03, 2018


  கருப்பு....   இது துக்கத்தின் நிறமல்ல. இது சமத்துவத்தின் நிறம். திராவிடத்தின் நிறம். இது சமூக சீர்திருத்தத்திற்கான நிறம். ஆம் இதுநாள் வரையில் கருப்பு என்பது ஒரு துக்க நிறமாகவே என்னுடைய ஆழ்மனதில் சிறுவயதிலேயே பதிந்துவிட்டது. ஆனால் இப்பொழுது நான் இந்த சமூகத்தை பார்க்கும் பார்வை சற்று விசாலமாக ஆகிவிட்டது. இதுவரை எனக்குத் தெரியாத பல காட்சிகளின் கண்ணுக்கு தெரிகிறது. இதுவரை என் காதுகளுக்குக் கேட்காத பல செய்திகள் என் காதுகளுக்கு எட்டுகிறது. இதுவரை உணராத பல வலிகளை என் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வலிகளை என்னால் உணர முடிகிறது.

 எனக்கு இறை நம்பிக்கை உண்டு. ஆனால் இந்து மதம் கட்டமைக்கப்பட்டிருக்கும் விதம் அது இறைவனை எடுத்துக் காட்டும் விதம் அவை இறைவன் அல்லது மதம் என்கிற பெயரால் சக மனிதனை ஒடுக்கும் விதம் இதில் கொஞ்சம் கூட எனக்கு உடன்பாடு  இல்லை.

    தலைவர் பெரியார் ஏன் இறைவனை மறுத்தார் என்பதற்கான புரிதல் எனக்கு வர ஆரம்பித்திருக்கிறது. சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கு முதல் காரணம் சாதி. சாதி இங்கே தழைத்தோங்க முக்கிய காரணம் மதம். மதம் இருப்பதற்கு முக்கிய காரணம் இறைவன். அங்கிருந்து தான் அனைத்து ஏற்றத்தாழ்வுகளும் ஆரம்பிக்கிறது அதனாலேயே தலைவர் பெரியார் அவர்கள் இறைவனை, மதத்தை, சாதியை ஒழிக்க வேண்டும் என்று போராடினார்.

    அவர் கருப்பு சட்டையை தன் திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு , சுயமரியாதையை பின்பற்றுபவர்களுக்கு, கடவுளை, சாதியை, மதத்தை மறுப்பவர்களுக்கு கொடுத்தார். கருப்பு என்பது ஒரு துக்க நிறமாகவே நம் அனைவரின் மனதிலும் திணிக்கப்பட்டுள்ளது. என் மனதிலும் கூட.

      கருப்பு என்பது என்னுடைய நிறம். என் சமூகத்தின் நிறம்.

   கருப்பு என்பது தூக்கமல்ல. கருப்பு என்பது அவமானமல்ல. கருப்பு என்பது அசிங்கம் அல்ல.

   கருப்பு என்பது பெருமை. கருப்பு என்பது அதிகாரம். கருப்பு என்பது சுயமரியாதை. கருப்பு என்பது கௌரவம்.

  அது என்னவோ தெரியவில்லை கருப்பு நிறத்தின் மீது எனக்கு ஒரு புதிய மோகம் பிறந்திருக்கிறது. இவ்வளவு நாட்கள் இத்தனை வருடங்கள் கருப்பை ஏதோ ஒரு பதில் சொல்லாத யாரும் விளக்காத சில காரணங்களுக்காக நான் அதை தவிர்த்து வந்தேன் என்பதை நினைக்கும்போது வெட்கப்படுகிறேன் . ஆனால் கருப்பை இன்று முதல் நான் பயன்படுத்தப் போகிறேன். அதுவும் வாழ்க்கையின் அனைத்து தருணங்களிலும் அதற்கு ஒரு முக்கிய பங்கு கொடுக்கப் போகிறேன் என்பதை நினைத்து நான் மிகவும் மிகவும் பெருமைப்படுகிறேன். எம் மக்களின் நிறம் கருப்பு என்பதிலும் நான் கருப்பன் என்பதிலும் நான் கர்வம் கொள்கிறேன்......

* தினேஷ்மாயா *
  

பரியேறும் பெருமாள்




   இன்று இந்த திரைக்காவியத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வலியை, உணர்வுகளை நன்றாக பிரதிபலித்தது. ஆதிக்க சாதியினர் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் சிலர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை ஒதுக்கி வைத்து, ஒதுக்கி வைத்து  பல இன்னல்களுக்கு ஆளாக்குகின்றனர் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. எத்தனையோ தமிழ் சினிமாக்கள் சாதிக் கொடுமையை நமக்கு காட்ட முற்பட்டாலும் இந்த திரைப்படம் சற்று வித்தியாசமாக இருந்தது. ஏனென்றால் இது ஒரு திரைப்படமாக இல்லை. திரைப்படத்திற்கான எந்த ஒரு தேவையில்லாத அம்சங்களையும் இதில் அதிகம் காண முடியவில்லை. அதனாலேயே இது ஒரு சமூகத்தினரின் வாழ்க்கை முறை என்பதை நான் உணர்ந்தேன். திரைப்படத்தின் கதை, திரைக்கதை, குறிப்பாக வசனங்கள் மிகவும் ஆழமாக இருந்தது. இசை.... இப்படத்திற்கு இசை மிகப்பெரிய பலமாக இருந்தது. பின்னணி இசையும் சரி பாடல்களும் சரி கதையோடு பொருந்தி இருந்தது பாடல் வரிகளும் அருமை. படத்தில் நடித்த அத்தனை பேருக்கும் நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை நாம் ஒரு மூன்றாவது ஆளாக இருந்து பார்க்காமல் அந்த வலியை நம்மையே உணர வைத்தது இந்த படத்தின் மிகப்பெரிய பலம்.

   வணக்கம் வணக்கமுங்க ,ரயில் விட போலாமா மற்றும் கருப்பி  இந்த மூன்று பாடல்கள் என்னை அதிகம் கவர்ந்தது. வசனம் இந்த படத்தின் இன்னொரு கதாநாயகன் என்றும் சொல்லலாம். சில இடங்களில் வசனம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. குறிப்பாக காலேஜ் பிரின்சிபாலிடம் நாயகன் பேசும் காட்சியாகட்டும் அல்லது கதையின் பிற்பாதியில் காலேஜ் ப்ரின்ஸ்பால் நாயகனுக்கு அறிவுரை சொல்லும் காட்சியாகட்டும், நாயகன் படத்தின் முடிவில் நாயகியின் அப்பாவிடம் பேசும் வசனமாகட்டும் அந்த இடங்களிலெல்லாம் வசனங்கள் ஏதோ ஒரு எட்டமுடியாத தூரத்திற்கு சென்று விட்டது. அவை வெறும் வசனம் அல்ல. 2000 ஆண்டுகளுக்கு மேலாக ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த வலி. அந்த வலியின் பிரதிபலிப்புதான் இந்த மாதிரி ஆழமான வசனங்கள்.

பல நாள் கழித்து போடு நல்ல திரைப்படம் பார்த்த அனுபவம் கிடைத்தது இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களின் முதல் படம் இது அவர் இதுபோல சமூகத்திற்கு தேவையான இதுபோன்ற பல இப்படங்களை நமக்குக் கொடுக்க வேண்டும் அவருக்கும் இப்படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களுக்கும் மற்றும் இத்திரைப்படத்தின் அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள் அதைவிட மேலாக இப்படி ஒரு அருமையான திரைப்படத்தை இந்த சமூகத்திற்கு இந்த தேவையான காலகட்டத்தில் கொடுத்தமைக்காக என் மனமார்ந்த நன்றிகளும்கூட...

*  தினேஷ்மாயா *