எவ்வளவு நாட்கள்தான் காதலிக்காகவே கவிதை எழுதுவது ?
இன்று கொஞ்சம் வித்தியாசமாக, மனைவிக்கு கவிதை எழுதலாம் என்று விரும்பினேன். கொஞ்சம் நகைக்கும்படியும் எழுதுகிறேன். ஒருநாள் வந்து அவள் படித்து சிரித்து ரசிப்பதற்காக..
“ சூரியன் சீக்கிரமே வந்து உன் தூக்கத்தை கலைக்கிறான்.
அவனை நாடு கடத்திவிடட்டுமா ?
காலையில் எழுந்ததும் எனக்கு நீ காஃபி போடவேண்டிய அவசியம் இல்லை.
நீ கஷ்டப்படுவாய் என்றுதான் நான் தேநீர் காஃபி பருகுவதையே நிறுத்திவிட்டேனடி..
தினமும் நீ கோலம்போட வேண்டும் என்றில்லை.
வாசலில் கொஞ்ச நேரம் நடந்துவிட்டு போ.
அதுவே கோலமாகிவிடும்..
குளிக்க செல்லும் முன் மறக்காமல் துண்டு எடுத்துக்கொண்டு செல்..
இல்லாவிடில் நீ குளிக்காமல் இருப்பாய் !!
இருவரும் ஒரே நேரத்தில்தான் உறங்குகிறோம்.
நீ மட்டும் எப்படி எனக்கு முன்னர் விழித்துக்கொள்கிறாய்?
நீ எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கிறாய்.
நான் உன் விழிகளுடன் எப்போதும் விழிப்புணர்ச்சியுடன் இருக்கிறேன் !
நீ துணி துவைத்து முடித்துவிட்டாய்..
துணிகளை காய வைக்க அந்த வானவில்லை கொண்டுவரட்டுமா ?
காய்கறிகளை நறுக்க கத்தி வேண்டாம் உனக்கு
உன் மின்னல் பார்வை போதுமடி..
நீ செய்யும் சமையல் மட்டும் எவ்வளவு நாட்கள் ஆனாலும்
கெட்டுப்போவதில்லையே ! கண்ணே, அந்த மாயம் என்னவோ ?
வாரத்தில் இரண்டு நாட்கள்
எனக்கு மட்டுமல்ல உனக்கும் விடுமுறைதான்..
அப்போது உன் வேலைகள் அனைத்தும் என் பொறுப்பு..
அழகின் மொத்த உருவமும் நீ..
அன்பின் மொத்த உருவமும் நீ..
நிர்வாகத்திறன் ஆண்களைவிட பெண்களுக்குத்தான் அதிகம் என்பதை
நம் வீட்டை நீ நிர்வகிப்பதில் நிரூபித்துவிட்டாய்..
நான் போட்ட மூன்று முடிச்சு இவ்வளவு உறுதியானதா ?
உன் மூச்சுக்காற்றில் பாதியை எனக்காகவே சுவாசிக்கிறாயே !
நீ மீன் குழம்பு வைக்கும்போது தவறாமல் உன் கண்களை மூடிக்கொள்
உன் கண்கள் குழம்பில் குதித்துவிடப்போகிறது..
என்னருகில் உறங்கும்போது மறக்காமல் மூக்குத்தி அணிந்துக்கொள்
நீ மூக்குத்தியை கழட்டிவிட்டால், உன் மூச்சு எனக்கு புல்லாங்குழலாய் கேட்கிறதே..
நான் முத்தம் கொடுக்கும்போது சத்தம் வருகிறதோ இல்லையோ
உனக்கு தவறாமல் வெட்கம் வந்துவிடுகிறது.. ”
- சமர்ப்பணம் : வரப்போகும் என் மனைவிக்கு(?)
* தினேஷ்மாயா *
0 Comments:
Post a Comment