இன்று அதிகாலை 5 மணிக்கு எழுந்து யோகா வகுப்பிற்கு சென்றேன். வகுப்பு அமைந்த இடம் ஒரு பெரிய மைதானத்தின் அருகில். அந்த மைதானத்தில் கிட்டத்தட்ட 200-300 பேர் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். எனக்கு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அதில் 95% பேர் 45 அல்லது 50 வயதிற்கு மேற்பட்டோர். நான் அவர்களைப் பார்க்கையில் எனக்குள் ஒரு ஆழ்ந்த சிந்தனை ஓடிக்கொண்டே இருந்தது. இவர்கள் அதிகம் வாழப்போவது இன்னும் 20 அல்லது 30 வருடங்கள் இருக்கும். அவர்கள் தங்கள் வாழ்க்கையை இன்னும் அதிகப்படுத்த, தங்கள் உடல் மீது அக்கறைக் கொண்டு நடைப்பயிற்சி செய்து வந்தனர். ஆனால், பெரும்பாலான இன்றைய சமூகத்தினரோ தங்கள் உடல்மீது அதிகம் அக்கறைக் கொள்ளாமல் உடலுக்கு அழிவைத்தரும் செயல்களில்தான் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என்று புகையிலையை விற்கும்போதே எழுதிப்போட்டாலும் அதை கிழித்துப்போட்டுவிட்டு புகைக்க துவங்குகின்றனர். இன்று யோகாவில் மூச்சுப்பயிற்சியும், சூரிய நமஸ்காரமும் அதிகம் எனக்கு பிடித்திருந்தது. ஒரு மணி நேரம் யோகா வகுப்பு முடிந்த பின்னர் என் மனதும் உடலும் ஏதோ ஒரு புதிய அதிர்வை உணர்ந்தது அது நன்றாகவும் இருந்தது. மனதிற்கும் உடலுக்கும் ஒரு புதுவித சக்தி கிடைத்த அனுபவத்தை உணர்ந்தேன்.
பாரதியின் புதிய ஆத்திசூடியின் வரி ஒன்று மனதில் பட்டது.
“உடலினைஉறுதிசெய்”
நான் சொல்வதெல்லாம் உடலினை உறுதி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, வயதானவர்களே தங்கள் உடல்மீது அவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ளும் போது இன்றைய இளைஞர்கள் தங்கள் உடல் மீது கொஞ்சம் அக்கறை வைத்து அதை அழிக்கும் விதமான் செயல்களை தவிர்த்தாலே போதும். உடல் நன்றாக இருந்தால்தான் மனது நன்றாக இருக்கும், மனம் நன்றாக இருந்தால்தான் செயல் நன்றாக அமையும். செயல் நன்றாக இருந்தால்தான் நமது வாழ்க்கை நன்றாக அமையும். ஆகவே, நம் உடல் மீதும் கொஞ்சம் அக்கறையை வைத்துதான் பார்ப்போமே தோழர்களே....
- என்றும் அன்புடன்
****தினேஷ்மாயா****
0 Comments:
Post a Comment