ஆழ்மனம் சொல்வது பல நேரங்களில் நடந்துவிடுமல்லவா. அப்படியான ஒரு உணர்வு எனக்கு இப்போது எழுகிறது.
26.08.2022
இன்றைய தினம் என் அலுவலகத்தில், துறை ரீதியான தேர்விற்கு தயாராகும் சுமார் 100-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நான் வகுப்பு எடுக்கிறேன். நான் பல ஆண்டுகளாக எண்ணற்ற நபர்களுக்கு வகுப்பு எடுத்திருக்கிறேன். ஆனால் அது ஒரே நேரத்தில் அதிகபட்சம் 10 முதல் 15 நபர்களுக்கு எடுத்திருப்பேன். அதிலும் பெரும்பாலானவர்கள் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். அதனால் எந்தவித தயக்கமுமின்றி பாடம் நடத்தியிருக்கிறேன்.
ஆனால், இன்றோ நான் அறிந்திராத 100-க்கும் மேலான நபர்களுக்கு வகுப்பு எடுக்கப்போகிறேன். இந்த நாள் என் வாழ்வில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையுமென என் ஆழ்மனம் சொல்கிறது.
சில மாதங்களாக, என் அலுவலக நண்பர்கள் சுமார் 15 பேருக்கு நான் வகுப்பு எடுத்து வருகிறேன். அதிலிருந்து ஒருவர் சொன்னார், Sir your teaching is so good and unique என்று. அது எனக்கு மிகவும் மன நிறைவாக இருந்தது. அது எனக்கு மேலும் உத்வேகத்தை தந்திருக்கிறது.
எனக்கு நினைவு தெரிந்து நான் எட்டாவது படிக்கும் காலத்திலிருந்தே என் நண்பர்களுக்கு கணக்குப் பாடம் எடுத்து வருகிறேன். 2002-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை எதோ வகையில் நான் பிறருக்கு எதையாவது கற்பித்துக்கொண்டே இருந்திருக்கிறேன், இருக்கிறேன். இதுவரை இந்த 20 வருட பயணத்தில் குறைவான நபர்களுக்கு மட்டுமே கற்பித்து வந்துள்ளேன். அது இன்று முதல் மிகப்பெரிய பயணத்தை நான் மேற்கொள்ள ஒரு தருணத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று நான் உணர்கிறேன்.
பிறருக்கு கற்பிக்க வேண்டுமென்பதால் நானும் அதிகம் படிக்கிறேன். அது என் அறிவையும் மெருகேற்றுகிறது. கற்று மகிழ்ந்து கற்பித்தும் மகிழ்கிறேன்.
* தினேஷ்மாயா *